“வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள பணம் நாட்டுக்கு கொண்டுவரப்படும், பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும் எனக் கூறிய தேசிய மக்கள் சக்தியினர், ஆட்சிக்கு வந்த பிறகு அந்த உறுதிமொழியை மறந்துள்ளனர்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
”கள்வர்களை பிடிப்பதற்கு மற்றும் ஊழல், மோசடிகளைத் தடுப்பதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு நாம் எதிர்ப்பு இல்லை. அதற்கு முழு ஆதரவு வழங்கப்படும்.
எனினும் கள்வர்கள் என்ற போர்வையில் எதிரணியை அடக்க – ஒடுக்க முற்பட்டால் அதனை அனுமதிக்கப்போவதில்லை. அதற்கு எதிராக அணி திரள்வோம்.
கள்வர்களைக் கைது செய்வோம், வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட பணத்தை கொண்டுவருவோம் எனக் கூறிய தேசிய மக்கள் சக்தியினர் அவற்றை மறந்து எதிரணி மீது கைவைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றது.
மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை வைத்துதான் எதிரணியை மட்டுப்படும் நடவடிக்கை நாடாளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் இடம்பெறுகின்றது. நாடாளுமன்ற ஜனநாயகத்தை நாம் பாதுகாக்க வேண்டும்.” – என்றார் ரஞ்சித் மத்தும பண்டார்.