கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் வகிபாகம் முன்மாதிரியானது – ஜனாதிபதி

0
23

பின்தங்கியுள்ள சமூகத்தில் மீண்டும் மனிதாபிமானத்தின் உயிரோட்டத்தையும் ஆன்மீகப் பண்புகளையும் கொண்டு வருவதில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் வகிபாகம் முன்மாதிரியானது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பு உயர் மறை மாவட்ட ஆயர், பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் குருத்துவப் பணிவாழ்வின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று (07) கொழும்பு பேராயர் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கௌரவிப்பு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

சமூகத்தின் நல்வாழ்வு மற்றும் ஆன்மீகத்தை கட்டியெழுப்புவதற்காக பெரும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ள அன்னார், பாரிய சேவையாற்றும் ஒரு ராஜதந்திரி, பைபிளை மிக நன்றாக விளக்கி விடயங்களை முன்வைக்கக்கூடிய ஒரு வேத விற்பன்னர், சமூகத்தை எழுச்சியூட்டும் வலுவான ஆளுமை கொண்ட ஒரு பேச்சாளர் போன்ற பாத்திரங்களுக்கு அப்பால் உண்மையான மனிதநேயர் என்றும் அவர் தெரிவித்தார்.

காலஓட்டத்தில் மூடிமறைக்க இடமளிக்காது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் ஜனாதிபதி இதன் போது தெரிவித்தார். இது அரசாங்கம் மற்றும் அரசாங்கத்திற்குள் இருந்து ஆராயப்பட வேண்டிய ஒரு சவால் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் இந்த விடயத்தில் நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

தனது 50 வருடகால அனுபவத்தை இதன் போது நினைவு கூர்ந்த கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை 75 ஆண்டுகால சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவர ஜனாதிபதியினால் முடிந்திருப்பது குறித்து பாராட்டுத் தெரிவித்தார். அத்தோடு நாட்டில் பல்வேறு இனக்குழுக்களிடையே வெறுப்பை விதைக்கும் அரசியல் கலாச்சாரத்தை வேரோடு ஒழிக்க முடிந்திருப்பது குறித்தும் அன்னார் தனது நன்றியைத் தெரிவித்தார். நாட்டை ஒரு வளமான தேசத்தை நோக்கி இட்டுச் செல்வதில் ஒரு புதிய அணுகுமுறையின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

கொழும்பு உயர் மறை மாவட்ட ஆயர் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் குருத்துவ வாழ்க்கையின் 50 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் கடித உறை என்பன இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

மகா சங்கத்தினர், சர்வமதத் தலைவர்கள், இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் ஹெரல்ட் அந்தோணி பெரேரா, இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி மொன்சிக்னோர் ரொபர்டோ லுகினி, கொழும்பு உயர் மறை மாவட்ட துணை ஆயர்களான மெக்ஸ்வெல் சில்வா, அந்தோனி ஜயக்கொடி உள்ளிட்ட கத்தோலிக்க அருட்தந்தைகள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர்கள், முப்படைத் தளபதிகள், பதில் பொலிஸ் மா அதிபர், வெளிநாட்டுத் தூதுவர்கள் உட்பட பல பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.