யாழ்ப்பாணம் செம்மணி அகழ்வு; தென்னிந்திய பிரபலம் டி. ராஜேந்தர் ஆவேசம்

0
23

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழியில் தொடர்ந்து என்புக்கூடுகள் மீட்கப்படுவது தொடர்பில் தென்னிந்திய இயக்குநரும், நடிகரும், இசையமைப்பாளருமான டி. ராஜேந்தர் கருத்து வெளியிட்டுள்ளார்.

செம்மணி மனித புதைகுழி தொடர்பில் டி .ராஜேந்தர் மேலும் கூறுகையில்,

இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த அந்தப் பகுதியில் இராணுவத்தின் வெறியாட்டத்தையும், அந்த ஓநாய்களினுடைய களியாட்டத்தையும், மயானத்தில் அவர்கள் ஆடிய ஆட்டத்தையும் தமிழர்கள் மீது அவர்கள் கொண்ட காட்டத்தையும் சர்வதேச உலகம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தப் புதைகுழிக்குள்ளே இத்தனை உடல்கள் மீட்கப்படுகின்றன. தோண்டத் தோண்ட என்புக்கூடுகள் வந்து கொண்டே இருக்கின்றன. இதைப் பார்க்கும்போது தமிழர்களாகிய எமது நெஞ்சம் பதைபதைக்கிறது என டி .ராஜேந்தர்  தெரிவித்துள்ளார்.

மயானத்திலே பிணங்கள் எரிக்கப்பட்டால் அதுதான் வெந்து கொண்டிருக்கும். ஆனால் எங்களுடைய தமிழினத்தின் அந்த என்புக்கூடுகளை இவர்கள் தோண்டி எடுக்கின்ற போது எங்களுடைய நெஞ்சம் வெந்து கொண்டிருக்கின்றது.

சேயைக் கட்டி அணைத்த வண்ணம் தாயைக் கண்டெடுத்திருக்கிறார்கள். புத்தகப் பையை ஏந்தி பிடித்த சிறுவனைக் கொன்று குவித்திருக்கிறார்கள். உயிரோடு வைத்துப் புதைத்திருக்கிறார்களே நெஞ்சம் பதை பதைக்கிறது.

இதை எல்லாம் பார்க்கின்ற போது சர்வதேச அளவிலே எமது மக்களுக்கு ஒரு நீதி கிடைக்க வேண்டும். அந்த நீதிக்காகத் தமிழர்கள் ஒவ்வொருவரும் நாங்கள் தொப்புள் கொடி உறவுகளாகக் குரல் கொடுத்துக்கொண்டே இருப்போம் என நடிகர் டி .ராஜேந்தர்  தெரிவித்துள்ளார்.

அதேவேளை  நடிகர் சத்தியராஜும்  செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி தொடர்பில்  வேதனை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.