விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டவர்கள் குறித்தும் நீதியான விசாரணை தேவை

0
19

இலங்கையில் யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் மற்றும் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென யாழ் சிவில் சமூக அமைப்பின் தலைவர் அருண் சித்தார்த் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் (04) அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறிப்பாக 1990 களில் துணுக்காய் பகுதியில் உள்ள நெற்களஞ்சிய சாலை கட்டிடத் தொகுதியில் விடுதலைப் புலிகளால் இயக்கப்பட்டதாகக் கூறப்படும் சித்திரவதை முகாமில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டு அவர்களின் உடல்கள் பவானி குளம், சிவபுரம் பகுதியில் எரியூட்டப்பட்டு சாம்பல் நீரில் கரைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இராணுவத்தினரால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், ஆனால் விடுதலைப் புலிகளுக்கு எதிராக வழக்குத் தொடர முடியாத நிலை நீதிமன்றங்களில் இருப்பதாகவும் அருண் சித்தார்த் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதில் உள்ள சிக்கல்களை எடுத்துக்காட்டுவதாகவும், இதற்கு ஒரு அமைப்புசாரா அணுகுமுறை தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் நீதி விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களின் சந்தேகங்களும் ஐயங்களும் நீக்கப்பட வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.