ஆப்கன் தாலிபான் அரசாங்கத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்த முதல் நாடு ரஷ்யா

0
37

ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசாங்கத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா மாறியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ம் ஆண்டு முதல் தாலிபான்களின் ஆட்சி நடந்து வருகிறது. தாலிபான்களை அமெரிக்கா உள்பட பல நாடுகள் பயங்கரவாதிகளாக அங்கீகரித்துள்ளது. அதுமட்டுமின்றி தாலிபான்கள் உள்நாட்டு போரை தொடங்கி தான் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றினர். இதனால் இன்னும் ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசுக்கு பல நாடுகள் அங்கீகரிக்கவில்லை.

இந்நிலையில் தான் முதல் முதலாக ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசை ரஷ்யா அங்கீகரித்துள்ளது. அதாவது சமீபத்தில் ரஷ்யாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதரகராக தாலிபான் அரசால் குல் ஹசன் நியமிக்கப்பட்டார். அவரை ரஷ்யா ஏற்றுக்கொண்டுள்ளது. ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நடந்த நிகழ்ச்சியில் தாலிபான் தூதரை ரஷ்யா அங்கீகரித்தது. இந்த விழாவில் ரஷ்யாவின் வெளியுறவுத் துணை அமைச்சர் ஆண்ட்ரி ருடென்கோ, தாலிபான் தூதர் குல் ஹசனை சந்தித்து முறைப்படியான சான்றுகளை பெற்று கொண்டார்.

இது தொடர்பாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதற்கான செயல், பல்வேறு துறைகளில் நமது நாடுகளுக்கு இடையே உற்பத்தி ரீதியான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு உத்வேகம் அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.