இலங்கையை உலுக்கிய கோர விபத்து; கவனம் ஈர்த்த தாயின் இறுதி கிரியை

0
59

கொத்மலை விபத்துகுள்ளான பேருந்தில் தன்னுயிரை தியாகம் செய்து தன்னுடைய பிள்ளையின் உயிரை காப்பாற்றிய தாயின் இறுதி கிரியை இன்று (13) மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ளது.

கதிர்காமத்தில் இருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்று கொத்மலை பொலிஸ் பிரிவின் கரடி எல்லா பகுதியில் நேற்று முன்தினம் (11) அதிகாலை விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். 45 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில் தனது 9 மாதங்களேயான மகளை காப்பாற்றுவதற்கு பெரும் பாடுபட்ட தாயின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. அந்த தாய் சேயுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் அந்த தாய் உயிரிழந்தார். அவருடைய 9 மாதங்களேயான குழந்தை பேராதனை வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் தாய், தந்தை மற்றும் 9 மாதங்களேயான குழந்தையுடன் தங்களுடைய ஏனைய நான்கு பிள்ளைகளும் சிக்கியுள்ளனர்.

காயமடைந்த நான்கு பிள்ளைகளும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொஸ்லாந்தை மீறியபெத்த எஸ் கே டிவிசைனைச் சேர்ந்த இவர்கள் கண்டியிலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுக்கொண்டிருந்த போதே இவ்வனர்த்தத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.

சம்பவத்தில் மரணமடைந்த திரு,திருமதி காசிநாதன், தனலட்சுமி ஆகிய இருவரின் பூதவுடல்களும் கொஸ்லாந்தை மீறியபெத்த எஸ் கே டிவிசைன் பொது மயானத்தில் செவ்வாய்க்கிழமை (13) மாலை 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில் தன்னுயிரை கொடுத்து குழந்தையை காப்பாற்றிய அந்த தாயின் செயல் கண்ணீரை வரவழக்கும் அதேசமயம் தாயையும் தந்தையையும் இழந்து தவிக்கும் சிறுவர்களின் நிலை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.