154 கிலோ தாய் ஏறி அமர்ந்ததால் 10 வயது சிறுவன் உயிரிழப்பு

0
111

154 கிலோ எடை கொண்ட தாய் ஏறி அமர்ந்ததால் 10 வயது சிறுவன் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று அமெரிக்காவில் நடந்தேறியுள்ளது.

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் வால்பரைசோ பகுதியில் வசித்து வருபவர் ஜெனிபர் லீ வில்சன் (வயது 48). இவருடைய வளர்ப்பு மகன் டகோடா லெவி ஸ்டீவன்ஸ் (வயது 10).

கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி போலீசாருக்கு அவசர அழைப்பு ஒன்று சென்றது. அதில் பேசிய ஜெனிபர் தனது மகன் டகோடா சுயநினைவின்றி கிடக்கிறான் என கூறியுள்ளார்.

இதனையடுத்து டகோடாவின் கழுத்து மற்றும் மார்பு பகுதியில் காயங்கள் காணப்பட்டன. அவனை சுயநினைவுக்கு கொண்டு வர முயற்சித்தனர். இதன்பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டான்.

பொலிசார் நடத்திய விசாரணையில் ஜெனிபர் கூறும்போது, டகோடா வீட்டை விட்டு ஓடி விட்டான். தேடி பார்த்தபோது பக்கத்து வீட்டில் இருந்தது தெரியவந்தது. அவனை வீட்டுக்கு அழைத்து வந்த பின்பும் வீட்டை விட்டு போகிறேன் என அடம் பிடித்து தரையில் அழுது புரண்டான் என கூறியுள்ளார்.

இதனால் அந்த சிறுவனின் மீது 5 நிமிடங்கள் வரை ஜெனிபர் அமர்ந்து இருக்கிறார். 154 கிலோ எடை கொண்ட ஜெனிபர் அமர்ந்ததும் சிறிது நேரத்தில் சிறுவன் அசையாமல் கிடந்துள்ளான்.

அவன் நடிக்கிறான் என ஜெனிபர் நினைத்துள்ளார். இதன்பின்னர் அவனை பரிசோதித்தபோது சுயநினைவின்றி இருந்ததனால் முதலுதவி சிகிச்சையை அளித்துள்ளார். சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் இடம்பெற்ற விசாரணையில் சிறுவன் வெளியே ஓடி விட கூடாது என்பதற்காகவே சிறுவன் மீது அமர்ந்ததற்கான காரணங்களாக அவர் கூறியுள்ளார்.

பிரேத பரிசோதனையில் சிறுவன் டகோடா மூச்சு திணறி உயிரிழந்தது உறுதியானது. சம்பவம் தொடர்பில் பக்கத்து வீட்டுக்கார பெண்மணி கூறுகையில்,

சிறுவன் பாதிப்புக்கு உள்ளாவதற்கு முன் என்னுடைய வீட்டுக்கு வந்து என்னை தத்தெடுத்து கொள்ளுங்கள். ஏனெனில் பெற்றோர் முகத்தில் குத்தி விட்டனர் என கூறினான் என்றார். எனினும் சிறுவனின் முகத்தில் காயங்கள் எதனையும் நான் பார்க்கவில்லை என்றும் அதன்பின்னர் ஜெனிபர் சிறுவனை அழைத்து செல்வதற்காக உடனடியாக வந்து விட்டார் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் மகன் டகோடாவை ஜெனிபர் கொலை செய்த குற்றத்திற்காக 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.