கொழும்பு மட்டக்குளி கடற்கரைப் பூங்காவில் இன்று (9) இடம்பெற்ற Clean Sri lanka திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட ‘அழகிய கடற்கரை கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்’ நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கருத்தின் அடிப்படையில் தொடங்கப்பட்ட ‘க்ளீன் ஶ்ரீலங்க’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 6 மாவட்டங்களை மையமாகக் கொண்டு இந்தக் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டம் இன்று மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இது செயல்படுத்தப்பட்டது. இதன் கீழ் காலி முகத்திடலைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகள் மற்றும் கொழும்பின் துறைமுக நகரங்களும் சுத்தம் செய்யப்பட்டன.
தெஹிவளை – கல்கிஸை கடற்கரையும் ஒரே நேரத்தில் சுத்தம் செய்யப்பட்டது. வத்தளையிலிருந்து நீர்கொழும்பு கடற்கரை வரையிலான 20 கிலோமீற்றர் தூரமுள்ள பகுதியும் சுத்தம் செய்யப்பட்டது.
இந்த திட்டம் இன்று களுத்துறை மாவட்டத்தில் 23 இடங்களில் செயல்படுத்தப்பட்டது. இதில் வடக்கு பயாகல கடற்கரையிலிருந்து மாகல்கந்த வரையிலான கடற்கரை பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டன.

காலி மாவட்டத்தில் பிரதான கடற்கரை சுத்தம் செய்யும் திட்டம் தடல்ல கடற்கரையை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்றது. உனவட்டுன கடற்கரையும் சுத்தம் செய்யப்பட்டது.
மேலும் மாத்தறை மாவட்டத்தில் கடலோர தூய்மைப்படுத்தும் பணியும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 43 இடங்களில் தூய்மைப்படுத்தும் திட்டங்களும் இன்று செயல்படுத்தப்பட்டன.