சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், சாண்டா தொப்பிகள் அணிந்து கிறிஸ்துமஸை பண்டிகையை கொண்டாடிய நிகழ்வு சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாசா வெளியிட்ட காணொளியில்,
சுனிதா வில்லியம்ஸ் சிவப்பு சட்டை அணிந்திருப்பதையும் மற்ற வீரர்கள் சாண்டா தொப்பிகளுடன் கிறிஸ்துமஸ் உற்சாகத்தில் ஈடுபட்டிருப்பதையும் காண கூடியாத இருந்தது.
இதேவேளை இந்தக் காணொளி பலரிடையே தற்போது கேள்விகளை எழுப்பியுள்ளது. 8 நாட்கள் பயணமாகக் கடந்த ஜூன் 5 ஆம் திகதி விண்வெளிக்கு அனுப்பப்பட்ட இந்த வீரர்கள், தொழிநுட்பக் கோளாறு காரணமாகப் பல மாதங்களாக அங்கேயே இருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
வீரர்களை மீண்டும் பூமிக்கு அழைத்து வர நாசா 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில்தான் நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளது.

இந்நிலையில் 8 நாட்கள் பயணத்துக்குத் திட்டமிட்ட நாசா அவர்கள் விண்வெளியில் சிக்குவார்கள் என்று தெரிந்தே டிசம்பரில் வரும் கிறிஸ்துமஸ்க்கு தேவையான அலங்கார மரம், சாண்டா தொப்பி உள்ளிட்டவற்றைக் கொடுத்து அனுப்பியது எப்படி என்ற கேள்வியைப் பலர் முன்வைக்கின்றனர்.
மேலும் அந்தக் காணொளிக்கான விளக்கத்தை நாசா வழங்கியுள்ளது. நாசாவின் தகவலின்படி நவம்பரில் ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம் மூலமாகச் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு 3 டன் பொருட்கள் அனுப்பப்பட்டன.
இதில் கிறிஸ்துமஸ் மரம், அலங்காரங்கள், பரிசுகள், வான்கோழி இறைச்சி, உருளைக்கிழங்கு, காய்கறிகள், பிஸ்கட் குக்கீகள் உள்ளிட்ட சிறப்பு உணவுப் பொருட்களும் இடம்பெற்றன.
மேலும் பணி சார்ந்த தொழிநுட்ப பொருட்களும் அந்த விண்கலத்தில் அனுப்பப்பட்டதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிகழ்வு விண்வெளியில் இருந்தாலும் உற்சவங்களைக் கொண்டாடுவதற்கான மனித முயற்சியின் சிறந்த உதாரணமாகப் பார்க்கப்படுவதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.