இவ்வருடத்தின் மூன்றாம் காலாண்டில், அதாவது கடந்த ஜுலை – செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரம் 5.5 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
தீவிர பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு படிப்படியாக மீட்சியடைந்துவரும் நிலையில் புள்ளிவிபரத்திணைக்களத்தின் தரவுகளின்படி இவ்வருடத்தின் ஜுலை – செப்டெம்பர் வரையான மூன்று மாதங்களில் விவசாயத்துறை 3 சதவீதமாக வளர்ச்சியடைந்திருப்பதுடன் கைத்தொழில் மற்றும் சேவைத்துறைகள் முறையே 10.8 மற்றும் 2.6 சதவீதத்தினால் விரிவடைந்துள்ளன.
2022 இல் தீவிரமடைந்த நெருக்கடியை அடுத்து பொருளாதாரம் 7.3 சதவீத சுருக்கத்தைப் பதிவு செய்தது. இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த ஒரு வருடகாலமாக நிலையான மீட்சிக்கான குறிகாட்டிகளைக் காண்பித்துவரும் நாட்டின் பொருளாதாரம், இவ்வருடத்தின் மூன்றாம் காலாண்டில் 5.5 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அதேவேளை சமகால பொருளாதார நிலைவரம் மற்றும் எதிர்கால எதிர்பார்க்கைகளின் அடிப்படையில் நோக்குகையில் 2024 ஆம் ஆண்டில் 4.5 – 5 சதவீத பொருளாதார வளர்ச்சி பதிவாகும் என எதிர்வுகூறியுள்ளது.
அத்தோடு கடந்த காலங்களில் மின்கட்டணம் மற்றும் எரிபொருள் விலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் ரூபாவின் பெறுமதி உயர்வு என்பன பணவீக்கம் 2.1 சதவீதம் எனும் மிகக்குறைந்த மட்டத்துக்குக் கொண்டுவரப்படுவதற்குப் பங்களிப்புச் செய்துள்ளன.