19 வயதுக்குட்பட்ட மகளிர் ஆசியக் கிண்ணம் – முதல் முறையாக இந்தியா சாம்பியன்

0
28

19 வயதுக்குட்பட்ட இந்திய மகளிர் அணி முதல் முறையாக ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. பங்களாதேஷ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றிபெற்றுள்ளது.

இந்திப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 117 ஓட்டங்களை குவித்திருந்தது.

இந்தியா சார்பில் கோங்கடி திரிஷா அபாரமாக ஆடி 52 ஓட்டங்களை குவித்தார். ஏனைய வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

பங்களாதேஷ் அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஃபர்ஜானா எஸ்மின் நான்கு விக்கெட்டுகளையும் நிஷிதா இரண்டு விக்கெட்டுகளையும் ஹபிபா இஸ்லாம் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

எளிய இலக்கை துரத்திய பங்களாதேஷ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் துவக்க வீராங்கனைகளில் ஒருவரான மொசாமத் எவா ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

இவருடன் களமிறங்கிய ஃபஹோமிதா சோயா 18 ஓட்டங்களையும் அடுத்து வந்த சௌமியா அக்தெர் எட்டு ஓட்டங்களையும் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்தவர்களில் ஜூரியா ஃபெர்டோஸ் மட்டும் 22 ஓட்டங்களை அடிக்க மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இறுதியில் பங்களாதேஷ் அணி 18.3 ஓவர்களில் வெறும் 76 ஓட்டங்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணி 41 ஓட்டங்களில் வெற்றி பெற்று கிண்ணத்தைக் கைப்பற்றியது.

இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஆயுஷி சுக்ளா மூன்று விக்கெட்டுகளையும் பருனிகா சிசோடியா மற்றும் சோனம் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளையும் ஜோஷிதா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.