பட்ஜெட்டின் பின்னரே உள்ளூராட்சித் தேர்தல்: புதிய வேட்புமனுக்களை கோர இணக்கம் – கட்சித் தலைவர்கள் பச்சைக்கொடி

0
166

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை புதிய வேட்புமனுக்களை கோரி நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது.

இதனால் 2025ஆம் நிதியாண்டுக்கான வரவு -செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை ஏப்ரல் மாதம் நடத்த அரசாங்கம் ஆலோசனைகளை நடத்தியுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடத்தப்படும் என அண்மையில் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தார். என்றாலும் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,

”ஜனவரி மாதம் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான நிதி ஒதுக்கீடுகள் இல்லை. இடைக்கால கணக்கறிக்கையின் ஊடாக தேர்தலை நடத்துவதற்கான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகளும் இல்லை என்பதால் புதிய வரவு – செலவுத் திட்டத்திலேயே தேர்தலை நடத்துவதற்கான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ள முடியும்” என்றார்.

இந்நிலையில் இந்த வாரம் ஆரம்பத்தில் இடம்பெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பிலும் அது தொடர்பிலான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இதன்போது தேர்தலை ஏற்கனவே கோரப்பட்ட வேட்புமனுக்களின் கீழ் நடத்துவதில் உள்ள சிக்கல் நிலைகள் குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன. பழைய வேட்புமனுக்களின் கீழ் தேர்தலை நடத்த முடியாதென்பதை ஏற்றுக்கொள்வதாக எதிர்க்கட்சிகளின் சார்பில் பங்குபற்றியிருந்த கட்சித் தலைவர்களும் ஏற்றுக்கொண்டதால் புதிய வேட்புமனுக்களை கோரி தேர்தலை நடத்த இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த கட்சித் தலைவர் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடவும் கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். அதன் பிரகாரம் எதிர்வரும் வாரம் கட்சித் தலைவர்கள் இதுதொடர்பில் கலந்துரையாடல் நடத்தி இறுதி தீர்மானமொன்றை எட்டவும் உள்ளனர்.

இந்த நிலையில், 2025ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு ஏப்ரல் மாதத்தில் தேர்தலை நடத்த அரசாங்கம் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது. கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முழுயைான இணக்கப்பாடுகளை எட்டிய பின்னர் இந்த அறிவிப்பை அரசாங்கம் வெளியிட தயாராகி வருவதாகவும் தெரியவருகிறது.

என்றாலும், 2023 மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடத்தப்படவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தமைக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் என்ற வகையில் ஜனாதிபதியும், நிதியமைச்சரும் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் கடந்த அரசாங்கத்துக்கு தீர்ப்பளித்திருந்தது.

அதன்படி,உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தன. என்றாலும், ஆட்சிமாற்றத்தை அடுத்து பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. இந்தப் பின்புலத்தில் மீண்டும் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பிலான கலந்துரையாடல்கள் ஆரம்பமாகியுள்ளன.

கடந்த 27ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவும் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பிலான கலந்துரையாடல்களை நடத்தியது. என்றாலும் உயர்தரப் பரீட்சை காலம் என்பதால் இதுதொடர்பிலான அறிவிப்புகளை பின்னர் வெளியிடலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.