ஜனவரி 20ஆம் திகதி பதவியேற்றதும் கனடா முதலான நாடுகளுக்கு வரி விதிப்பேன்: ட்ரம்ப் அறிவிப்பு

0
40

தான் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும் முதல் வேலையாக கனடா முதலான சில நாடுகளுக்கு வரி விதிப்பது தொடர்பிலான ஆவணங்களில் கையெழுத்திட உள்ளதாக தெரிவித்துள்ளார் ட்ரம்ப்.

சமூக ஊடகம் ஒன்றில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் ஜனவரி மாதம் 20ஆம் திகதி தான் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும் தான் கையெழுத்திட இருக்கும் முதல் ஆவணங்களில் ஒன்று கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு வரி விதிப்பது தொடர்பிலானதாகத்தான் இருக்கும் என்று கூறியுள்ளார்.

கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 25 சதவிகித வரி விதிக்கப்படும் என்று கூறியுள்ளார் ட்ரம்ப்.

இந்த இரண்டு நாடுகளும் போதைப்பொருட்களையும் எல்லை தாண்டி சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழையும் புலம்பெயர்ந்தோரையும் கட்டுப்படுத்தும்வரை இந்த வரிவிதிப்பு அமுலில் இருக்கும் என்றும் கூறியுள்ளார் ட்ரம்ப்.

கனடா ஏற்றுமதி செய்யும் பொருட்களில் 75 சதவிகிதத்துக்கும் அதிக பொருட்கள் அமெரிக்காவுக்குத்தான் செல்கின்றன என்பதால் அமெரிக்காவின் மிரட்டலுக்கெதிராக கனடாவால் எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.