புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப் பிரமாணம் இன்று (18) முற்பகல் 10.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி அனைத்து அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களும் இன்றைய தினம் பதவிப்பிரமாணம் செய்து கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
புதிய அரசாங்கத்தின் பிரதமர் பதவியை கலாநிதி ஹரிணி அமரசூரிய வகிப்பார் என அரசியல் வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
அதேபோல் இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சராக இருந்த விஜித ஹேரத்திற்கு அதிகாரமிக்க அமைச்சு பதவி வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்படி நிதி அமைச்சராக விஜித ஹேரத், சுகாதார அமைச்சராக நளிந்த ஜயதிஸ்ஸ, மீன்பிடி அமைச்சராக கே.டி.லால்கந்த, மின்சக்தி-எரிசக்தி அமைச்சராக சுனில் ஹந்துநெத்தி நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் அதிகாரபூர்த தகவல்கள் வெளியாகவில்லை. அமைச்சரவை இருபத்தைந்துக்கு மட்டுப்படுத்தப்படும் என்றும் சில அமைச்சுக்களுக்கு பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நாட்டுக்கு அறிவித்திருந்தார்.
அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை வழங்குவதில் விசேட கவனம் செலுத்தப்பட்டு நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களுக்கும் நியாயமான முறையில் நியமனங்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை எதிர்வரும் 21ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூடும் எனவும் இதன்போது சபாநாயகர் உள்ளிட்டவர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் சபாநாயகராக பிமல் ரத்நாயக்க நியமிக்கப்படுவார் எனவும் பிரதி சபாநாயகராக தமிழர் ஒருவரை நியமிப்பதற்கு ஆலோசனை நடந்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் ஆளும் கட்சியின் சபை முதல்வராக (பிரதம கொறடா) விஜித ஹேரத் நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.