அறுகம்பே விவகாரம்: திடுக்கிடும் தகவல்களை வெளியிட்ட அமெரிக்க நீதித்துறை

0
69

ஈரானின் சொத்து என அடையாளம் காணப்பட்ட ஃபர்ஹாத் ஷகேரிக்கு இஸ்லாமிய புரட்சிகர காவற்படை (IRGC) மூலம் இலங்கையில் உள்ள இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைக்க அறிவுறுத்தப்பட்டதாகவும் அறுகம்பே பகுதியில் பாரிய துப்பாக்கிச் சூடு நடத்த திட்டமிட்டிருந்தாகவும் அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.

ஆஃப்கானிஸ்தானை சேர்ந்த 51 வயதான ஃபர்ஹாத் ஷகேரி என்பவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அமெரிக்க நீதித்துறை அறிவித்துள்ளது. அதில் ட்ரம்பைக் கொலை செய்ய திட்டமிட்டதாக ஃபர்ஹாத் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தேர்வாவதற்கு முன்னர் அவரைக் கொலை செய்வதற்கு ஈரான் சதித் திட்டம் தீட்டியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் ஆப்கானிஸ்தான் மீதும் அமெரிக்க அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

ஷகேரி இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் ஈரானில் இருப்பதாக நம்பப்படுவதாகவும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த கூற்றுகள் “முற்றிலும் ஆதாரமற்றவை” என ஈரான் மறுத்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் 02 ஆவது முறையாக ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இவர் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் அவரது காதில் காயம் ஏற்பட்டது.

அதன் பின்னர் புளோரிடா மாகாணத்தில் கோல்ப் மைதான கிளப்பில் டிரம்ப் விளையாடிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபரொருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டிருந்தார். ஆனாலும் ட்ரம்பிற்கு எதுவித காயங்களும் ஏற்படவில்லை.

இந்நிலையில், நியூயார்க்கின் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் ஈரானின் புரட்சிகர காவற் படையை சேர்ந்த அதிகாரி ஒருவர் ட்ரம்பை கண்காணிக்கவும் அவரை படுகொலை செய்வதற்கான திட்டத்தை தயாரிக்கவும் செப்டம்பர் மாதம் ஷகேரிக்கு உத்தரவிட்டதாக வழக்கறிஞர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

2019 ஆம் ஆண்டில் 92 கிலோகிராம் ஹெரோயினுடன் அவர் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேலும் இருவர் மீதும் நீதித்துறை குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. ஈரானை கடுமையாக விமர்சிக்கும் ஒரு அமெரிக்க பத்திரிகையாளரைக் கொலை செய்வதற்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கில் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த இருவரில் 49 வயதான கார்லைல் ரிவேரா நியூயோர்க்கின் புரூக்ளினில் வசித்ததுடன் 36 வயதான ஜொனாதன் லேண்ட்ஹோல்ட் நியூயோர்க்கிற்கு அருகிலுள்ள ஸ்டேட்டன் தீவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவரும் கடந்த வியாழக்கிழமை நியூயோர்க்கின் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அவர்களின் வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதால் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.