19 குற்றவியல் வழக்குகள்; தொடரும் வழக்குகளால் திணறும் வைத்தியர் அர்ச்சுனா!

0
97

யாழ்ப்பாணம் சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பில் கடந்த 03.07.2024 முகநூல் நேரலையை பதிவிட்ட வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா மறுநாள் 04.07.2024 யாழ் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி கேதீஸ்வரன் தொடர்பில் தனது முகநூல் ஊடக அபாண்டமான ஆதரமற்ற அடிப்படைகளற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில் முகநூலில் நேரலை செய்தமைக்கு எதிராக கடந்த 09.11.2024 வெள்ளிக்கிழமை பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றில் ஐந்து கோடி ரூபா மானநஷ்டம் கோரி (வழக்கு இலக்கம் – மானநஷ்டம் 20037/24) தீங்கியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தனது முகநூல் நேரலையில் வைத்திய கலாநிதி கேதீஸ்வரன் மருந்தகங்கள் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு போதை மருந்துகளை விநியோகம் செய்வதாக ஆதரமற்ற அடிப்படைகளற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

இது தொடர்பில் வைத்தியர் அர்ச்சுனாவிற்கு அவர் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பதாகவே 09.09.2024 அன்று வைத்திய கலாநிதி கேதீஸ்வரனின் சட்டத்தரணி ஊடாக கேள்விக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

எனினும் வைத்தியர் அர்ச்சுனா அக்கேள்விக் கடிதத்திற்கு பதிலளிக்கத் தவறிய நிலையில் இரு மாதங்களின் பின் கடந்த வெள்ளிக்கிழமை 09.11.2024 அன்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை அருச்சுனாவிற்கு எதிராக 19 குற்றவியல் வழங்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில் இது முதலாவது குடியியல் வழக்காகும்.

இந்நிலையில் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவின் இவ் அபாண்டமான ஆதரமற்ற அடிப்படைகளற்ற குற்றச்சாட்டுத் தொடர்பில் 09.07.2024 அன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பாராளுமன்றில் உரையாற்றியிருந்ததோடு குற்றச்சாட்டுத் தொடர்பில் விசாரணை நடாத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதேவேளை பிறர் மீது இவ்வாறு அபாண்டமான ஆதரமற்ற அடிப்படைகளற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகின்ற நிலையில் ஒருகாலத்தில்  மருத்துவருக்கு ஆதரவாக பேசியிருந்த பலர் அவரது நடவடிக்கைகளை கடும் அதிருப்தியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.