நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா தமைமையிலான சுயேட்சைக் குழுவினரின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்கு இளைஞர்கள் சிலர் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் தற்போது மும்முரமாக தமது பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்தவகையில், சுயேட்சை குழு 17 முதன்மை வேட்பாளராக போட்டியிடும் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்ட குழுவினர் யாழ். சாவகச்சேரி நகரில் பிரசார நடவடிக்கையில் நேற்றையதினம்(08) ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது அவர்களுக்கு அங்குள்ள இளைஞர்கள் சிலர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக தெரியவருகின்றது. சாவகச்சேரி நகரில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இளைஞர்களே அருச்சுனாவுக்கு எதிராக எதிர்ப்பை வெளியிட்டனர்.
சாவகச்சேரி வைத்தியசாலையில் இடம்பெற்ற போராட்டத்தின்போது முன்னின்று உதவியவர்களைப் புறந்தள்ளி வைத்தியர் அர்ச்சுனா புதியவர்களை இணைத்துள்ளமையையும் அவரது செயற்பாடுகளையும் குறித்த இளைஞர்கள் கண்டித்தனர்.
எனினும் இளைஞர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்ட குழுவினர் தமது பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.