வெள்ளை மாளிகைக்கு பெண் தலைமை அதிகாரி: அமெரிக்க வரலாற்றில் இதுவே முதன்முறை

0
22

அமெரிக்க ஜனாதிபதித் தேர்த்லில் வெற்றி பெற்ற டொனாலட் ட்ரம்ப் தனது பிரச்சார உதவியாளர் சூசி வைல்ஸை வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாக நியமித்துள்ளார். இந்த பதவிக்கு முதன்முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. ட்ரம்ப்பின் தேர்தல் பிரச்சாரம் மற்றும் பரப்புரை சார்ந்த பணியை சூசி வைல்ஸ் நிர்வகித்தார்.

இந்நிலையில் நியமனம் குறித்து ட்ரம்ப் தெரிவித்திருப்பதாவது,

“சூசி புத்திசாலி என்பதுடன் புதுமை விரும்பி அவர் உலகளவில் மதிக்கப்படுகிறார். அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றும் பணியில் அவர் அயராது பாடுபடுவார். அதற்கான உழைப்பை கொடுப்பார் என நம்புகிறேன்.

அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக வெள்ளை மாளிகையின் பெண் தலைமை அதிகாரியாக இருக்க சூசி தகுதியானவர்” என ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார். 67 வயதான சூசி வைல்ஸ் அமெரிக்க அரசியல் ஆலோசகராக 1979 ஆம் ஆண்டில் தனது பணியை ஆரம்பித்தார்.

1980 ஆம் ஆண்டில் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ரொனால்ட் ரீகன் உடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார்.

2016 ஆம் அண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப் போட்டியிட்ட போது புளோரிடாவில் பிரச்சாரம் மேற்கொண்டார். தற்போது ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில் வெள்ளை மாளிகையின் 32 ஆவது தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.