2030 இல் இராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும்: ஊடகப் பேச்சாளர்

0
23

இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டில் அதகளவிலானோரை பணியில் அமர்த்திய இராணுவ வீரர்களின் எண்ணிக்கை தேவையான அளவில் குறைக்கும் நடைமுறை முறையாக நடைபெற்று வருவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் கே.ஏ.என். சிசிர குமார தெரிவித்தார்.

அதன்படி, தற்போது 1,43,000 ஆக இருக்கும் இராணுவத்தினரின் ஆட்பலத்தை 2030 ஆம் ஆண்டளவில் 130,000 ஆக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“இராணுவத்தின் ஆள்பலம் குறைந்து வருகிறது. ஓய்வூதியம் பெறும் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆட்சேர்ப்பு குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, வழக்கமான முறையில் 3000 பேர் பணியமர்த்தப்படுவார்கள். 1000 பேர் தன்னார்வப் படையில் சேர்க்கப்படுகிறார்கள். ஆனால் அதை விட ஓய்வு பெறுகிறார்கள்.

இது இயற்கையான சரிவு. 2030 ஆம் ஆண்டுக்குள் இராணுவம் 130,000 ஆக குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என கூறினார். 1,43,000 இராணுவத்தினரில் எவரும் பணியிலிருந்து நீக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவித்த இராணுவ ஊடகப் பேச்சாளர் இந்தக் கட்டுப்பாடு இயற்கையாகவே மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.