ஜனாதிபதி தேர்தலில் பிரசார செலவு அறிக்கையை வழங்கியிருந்த வேட்பாளர்களுள் அநேகமானோர் வழங்கியிருந்த அறிக்கைகள் தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கிய வடிவமைப்புக்கு உள்ளடங்கவில்லை என பஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
அதிகமான வாக்குகளைப் பெற்று முன்னிலையில் இருக்கும் வேட்பாளர் ஒருவரும் அதில் உள்ளடங்குவதாக அவ்வமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
குறித்த செலவு அறிக்கைகளை பஃப்ரல் அமைப்பு பரிசீலித்து வருவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் வடிவமைப்புக்கு ஏற்ற விதத்தில் அறிக்கைகளை வழங்கியுள்ளவர்களை அடையாளம் காணக்கூடியதாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதன்பின்னர், அந்த அறிக்கைகளை வழங்காமல் இருக்கும் வேட்பாளர்கள் மற்றும் வடிவமைப்புக்கு உள்ளடங்கும் வகையில் அறிக்கைகளை வழங்காத வேட்பாளர்கள் தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள பொலிஸாருடன் கலந்துரையாடி வருவதாக அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 38 வேட்பாளர்களுள் 35 பேர் செலவு அறிக்கைகளை வழங்கியுள்ள நிலையில் ஒருவர் மாத்திரம் வழங்கப்பட்ட கால அவகாசத்தின் பின்னர் அறிக்கையை வழங்கியுள்ளார். ஏனைய இருவரும் இதுவரையில் செலவு அறிக்கை வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.