சுமந்திரனுக்கு எதிராக சால்ஸ் நிர்மலநாதன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

0
59

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் உண்மைக்கு புறம்பாக தனக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் வெளியிட்டமை தொடர்பில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

நேற்று (3) மன்னார் தமிழரசு கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் தான் மதுபானசாலைக்கு சிபாரிசு கடிதம் வழங்கியதாகவும் அதை நான் வெளிப்படையாக ஒப்புக் கொண்டதாகவும் உண்மைக்கு புறம்பான கருத்தை எனக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் சுமந்திரன் கூறியிருந்தார்.

இந்த கருத்தை அவர் கூறிய சமயம் நான் இந்தியாவில் இருந்தமையினால் மன்னார் வந்தவுடன் உண்மைக்கு புறம்பான கருத்து வெளியிட்டமை தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸ் நிலையத்தில் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளேன்.

புலம்பெயர் தமிழர்கள் பலர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பை மேற்கொள்வதற்கான உதவிகளை கோரிய போது அவர்களின் தேவைகள் நிமித்தம் நான் அந்த சந்திப்புக்களை மேற்கொள்வதற்கான உதவிகளை செய்து கொடுத்தேன்.

அவ்வாறு சந்தித்தவர்களில் தனிப்பட்ட பழக்கத்தின் காரணமாக யாரும் அந்த வாய்ப்பை பயன்படுத்தி மதுபானசாலைகள் அமைப்பதற்கான அனுமதியை பெற்றிருந்தால் நான் அதற்கு பொறுப்பாக முடியாது. நான் அண்மையில் ஒரு ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலாக வழங்கியிருந்தேன்.

ஆனால் சுமந்திரன் அவர்கள் உண்மைக்கு புறம்பாக நான் எழுத்து மூல சிபாரிசு வழங்கியதாகவும் அதை ஒத்துக் கொண்டதாகவும் சொன்ன கருத்தை வன்மையாக கண்டிப்பதோடு பொலிஸார் குறித்த விடயத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தேன்.

அதனால் தான் தனக்கு இம்முறை ஆசனம் வழங்கவில்லை என சுமந்திரன் குறிப்பிடுவதாகும் அது முற்றிலும் பொய் என்றும் 2020 ஆண்டில் இருந்தே கட்சியில் செயற்பாடுகளில் இருந்த அதிருப்தி காரணமாக, உளவியல் ரீதியாக கட்சியோடு பயணிப்பதா? இல்லையா ? என்ற மனநிலை இருந்து வந்ததாகவும், அதே நேரம் எனது சுயவிருப்பத்தினாலும் உடல் நல பிரச்சினைகளாலும் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதாலும் நானாக மேற்கொண்ட முடிவே அது என அவர் சுட்டிக்காட்டினார்.