மூன்றாம் கட்ட மீளாய்வு: IMF குழு விரைவில் இலங்கைக்கு வருகை

0
29

”சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படும் இலங்கையின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் மூன்றாவது மீளாய்வைப் பற்றி கலந்துரையாடல்களை நடத்த சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளது.” இவ்வாறு சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் அண்மையில் நடத்திய கலந்துரையாடல் பயனுள்ளதாக இருந்ததாகவும் கிருஷ்ணா ஸ்ரீநிவாசன் கூறியுள்ளார்.

வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கையின் புதிய அரசாங்கம் சர்வதேச நாணய நிதிய திட்டத்திற்கான தனது அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தியுள்ளது. அமுல்படுத்தப்பட்டுள்ள பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தின் மூலம் இலங்கைக்கு பலன்கள் கிடைத்து வருகிறது.

விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்தப்படும் இலங்கையில் பொருளாதார சீர்திருத்தத் திட்டங்கள், பொருளாதார மற்றும் நிதிக் கொள்கை அமுலாக்கத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அண்மைய மேக்ரோ பொருளாதாரப் போக்குகள் வளர்ச்சியை காட்டுகிறது.

பொருளாதார சீர்திருத்தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியின் தொடர்ச்சியாக மூன்று தவணைகள் அதிகரிப்பை காட்டியுள்ளதுடன் குறைந்த பணவீக்கம், அதிகரித்த அரச வருவாய் சேகரிப்பு மற்றும் வெளிநாட்டு கையிருப்பு ஆகியவற்றின் மூலம் பொருளாதாரத்தை மீட்பதில் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் உதவியுள்ளது.” என்றார்.