தமிழரசுக் கட்சியில் எவரும் பார் உரிமம் பெறவில்லையா?: சத்தியக் கடதாசி வழங்க வேண்டும் – சுமந்தனிடம் பொதுஜன பெரமுன கோரிக்கை

0
37

இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் எவரும் பார் லைசனை பெறவில்லை என்பதை சத்தியக் கடதாசியின் ஊடாக வெளிப்படுத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஐன பெரமுன முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கட்சியில் சிலர் பார் லைசனை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு உடனடியாக பதில்கள் அளிக்கப்பட வேண்டும் என்றும் பொதுஐன பெரமுன தெரிவித்துள்ளது.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே பொதுஐன பெரமுன கட்சியின் யாழ். தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் கீதநாத் காசிலிங்கம் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

“பார் லைசன்ஸ்சோ – சாராயக் கடைகளோ யாருக்கும் இதுவரையில் பெற்றுக் கொடுக்கவில்லை எனச் சத்தியக் கடதாசி ஒன்றை அண்மையில் கொடுத்திருந்தேன். அதேபோல் என்னுடைய சக வேட்பாளர்கள் முக்கியமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இத்தகைய சத்தியக் கடதாசியைக் கொடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தேன்.

ஏனென்றால் தற்போது பரவலாகப் பேசப்படுகின்ற பார் லைசன்ஸ் விவகாரத்தில் யார், யார் இந்த பார் லைசன்ஸ்சை பெற்றுள்ளார்கள் என்று மக்களுக்குத் தெரிய வேண்டும். மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இவர்களை நாடாளுமன்றம் அனுப்பியது சாராயக் கடைகளை வாங்குவதற்காக அல்ல.

ஆகவே யார் யார் வாங்கினார்கள் என்பது வாக்களித்த மக்களுக்குக் கட்டாயம் தெரிய வேண்டும். ஆனால் இந்த உண்மையை வெளிப்படுத்த வேண்டிய புதிய ஆட்சியாளர்கள் கூட அதனை வெளிப்படுத்தத் தயங்குகின்ற நிலைமைதான் உள்ளது.

இவர்கள் ஏன் தயங்குகின்றார்கள் என்று எங்களுக்குத் தெரியாது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் முக்கியமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்து வேட்பாளர்களும் பார் லைசன்ஸ் வாங்கவில்லை எனச் சத்தியக் கடதாசியைக் கொடுக்க வேண்டும்.

ஆனால், இதுவரைக்கும் எவரும் அப்படியான சத்தியக் கடதாசியை கொடுக்கவில்லை. ஒவ்வொரு நாளும் சாரயக் கடை தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடகங்களில் கதைத்துக் கொண்டிருக்கின்றார்.

எங்களுக்கு அவர் ஒரு முன்மாதிரியான அரசியல்வாதி. அவரைப் பார்த்துத்தான் நாங்களும் சில விடயங்களை அதிலும் அவருடைய உரைகளில்தான் படித்துக் கொள்கின்றோம்.

எனவே நாம் கேட்டது போல அவர் முன்மாதிரியாக ஒரு சத்தியக் கடதாசியைக் கொடுக்க வேண்டும். சாராயக் கடை சம்பந்தமாக உண்மை தெரிய வேண்டும் என்று ஜனாதிபதியிடமும் சென்று கதைத்திருந்தவர் அவர்.

அவ்வாறு முதலில் அவரே ஒரு சத்தியக் கடதாசியைக் கொடுத்து அவரது கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் சத்தியக் கடதாசியைக் கொடுக்க அழுத்தம் கொடுக்க வேண்டும். இதனை முன்மாதிரியாகச் செய்யுங்கள் என சுமந்திரனை மரியாதையுடன் கேட்கின்றோம்.

வாக்களித்த மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும். பார் லைசன்ஸ் வாங்கினார்களா? இல்லையா? என்பது தெரிய வேண்டும். அதைவிடுத்து யாரையும் சேறு பூசுவது எங்களது நோக்கமும் அல்ல.” என்றார்.