முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) பிடியாணை பிறப்பித்துள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் ஆஜராகாத காரணத்தினால் அவரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இது குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
எனினும் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கவில்லை. இந்நிலையிலேயே அவரை கைது செய்து மன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக இன்று காலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வாக்குமூலம் ஒன்றை வழங்கியிருந்தார். அண்மையில் கண்டுப்பிடிக்கப்பட்ட சொகுசு வாகனம் ஒன்று தொடர்பிலேயே அவர் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
இன்றைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்கு தயார் என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நேற்று (22) அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.