அதிகளவான கடன்களை பெறும் தேசிய மக்கள் சக்தியின் அரசு: எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு நலிந்த ஜயதிஸ்ஸ பதில்

0
17

”நாடாளுமன்றத்தில் அனுமதியளிக்கப்பட்டுள்ள கடன் வரம்புக்கு உட்பட்டே தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் கடன்களை பெறுகிறது.” இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் கடந்த 15 நாட்களில் 419 பில்லியன் ரூபாவை கடனாக பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இதுகுறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன> நேற்றுமுன்தினம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு கண்டனம் வெளியிட்டிருந்தார்.

ஒரு நாளைக்கு 32.23 பில்லியன் ரூபா வீதம் இவ்வாறு அரசாங்கம் கடன்களை பெற்று வருவதாக ரோஹினி கவிரத்ன, குற்றம் சுமத்தியிருந்தார். இந்த நிலையில் அரசாங்கத்தின் மீது முன்வைக்கப்படும் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ள நலிந்த ஜயதிஸ்ஸ,

சமூக வலைத்தளங்களில் மாத்திரமல்ல நாட்டை ஆட்சி செய்தவர்களும் எமது அரசாங்கம் கடன் பெறுவதாக குற்றம் சுமத்துகின்றனர். கடன் வாங்காத ஒரு நாட்டை கையளித்திருந்தால் நாம் கடன்களை பெற வேண்டிய அவசியமில்லை.

கடன்களில் மூழ்கிய ஒரு நாட்டையே நாம் பொறுப்பேற்றுள்ளோம். பாரிய அளவில் கடன்களை பெற்று நாட்டை மிகவும் நெருக்கடியான பொருளாதார சூழ்நிலைக்குத் தள்ளியுள்ளனர். வருமானத்தை ஈட்டுவதற்கான எந்தவொரும் வழிமுறையையும் இவர்கள் உருவாக்கியிருக்கவில்லை. அதிலிருந்து நாம் மீண்டெழ வேண்டும்.

கடன்களை பெற்றே தற்போது சமநிலையை ஏற்படுத்த வேண்டியுள்ளது. ஆனால், கடன்களை பெறாத நாட்டை எவ்வாறு உருவாக்குவதென நாம் செய்துக்காட்டுகிறோம். அதற்கான அனைவரும் பொறுமையுடன் இருக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் கடன் பெற வேண்டிய வரம்மொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு உட்பட்டுதான் நாம் கடன்களை பெறுகிறோம். அதற்கு அப்பால் செல்ல மாட்டோம். குறித்த கடன்களின் ஊடாக பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்து வருகிறோம். கையளித்த இடத்திலிருந்துதான் பணியை தொடங்கியுள்ளோம்.” என்றார்.