ரணில் வழியில் செல்லும் அநுர: பெறுமாறு கெஞ்சுவதாக கூறுகிறார் கஞ்சன

0
17

சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போது செய்துக்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் காரணமாக தேர்தல் மேடையில் கூறியதை போல் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தால் வரிகளை குறைக்க முடியாது என முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் வழியிலேயே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் பயணிப்பதாகவும் பதவிகளை பெற்று பணிகளை செய்யுமாறு கெஞ்சுவதாகவும் கூறியுள்ளார்.

எரிபொருள் விலையை குறைக்க முடியுமான என முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் மேலும் கூறியுள்ளதாவது,

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தற்போதைய அரசாங்கம் நாடாளுமன்றத்தில் குறிப்பிடத்தக்க அதிகாரத்தைப் பெற வேண்டும். ஆட்சியில் சமநிலை இல்லாவிட்டால் மேலும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளக் கூடிய சூழல் உருவாகும்.

பொதுத் தேர்தலின் பின்னர் செய்கிறோம் அல்லது நாடாளுமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றி செய்கிறோம் எனக் கூறுவது நடைமுறைக்குச் சாத்தியமான விடயங்கள் அல்ல. சில பொருட்களுக்கான வற் வரியை முழுமையாக நீக்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் கோரியுள்ளனர். அவ்வாறு செய்ய வேண்டுமெனில் 18 வீதமாக உள்ள ஏனைய பொருட்களுக்கான வற் வரியை 21 வீதமாக உயர்த்த வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் 2029ஆம் ஆண்டுவரை கடனை மீளச் செலுத்த எமக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை நீக்கி 2024 ஆம் ஆண்டிலிருந்து நாம் கடனை மீளச் செலுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் கிடைக்கப்பெறும் வருமானங்களின் ஊடாக கடனை செலுத்த வேண்டும். கூறும் அனைத்து விடயங்களையும் எவ்வாறு செய்யப்போகிறார்கள் எனத் தெரியவில்லை.

ஆனால், ஒரு லீட்டர் எரிபொருளை இறக்குமதி செய்ய 193 ரூபாவரைான் செலவாகிறது. 90 முதல் 120 ரூபாவரை வரி அறவிப்படுகிறது. இதனை நீக்கி எரிபொருளை வழங்கினால் வருமானம் இல்லாது போகும்.

இதேவேளை, அநுரகுமார திஸாநாயக்கவுக்கு பாரிய மக்கள் ஆணை எதுவும் கிடைக்கவில்லை. 10 இல் 4 பேர் மாத்திரமே அவருக்கு ஆணை வழங்கியுள்ளனர். ஏனைய 6 பேர் அவருக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். அதிகளவானர்கள் இம்முறை வாக்களிக்கவும் இல்லை. கிடைக்கப் பெற்றுள்ள மக்கள் ஆணையின் ஊடாக அரசாங்கத்தின் அதிகாரத்தை கைப்பற்றும் எண்ணம் இவர்களுக்கு இல்லை.

அவ்வாறான எண்ணம் இருந்தால் முதல் இரண்டு நியமனங்களாக நிதி அமைச்சுக்கு புதிய செயலாளரை நியமித்திருப்பார்கள். இரண்டாவதாக மத்திய வங்கிக்கு புதிய ஆளுநரை நியமித்திருப்பார்கள். அதனை செய்யாது எமது அரசாங்கத்தில் இருந்த சிலருக்கு அழைப்புகளை விடுத்து பதவிகளை பெறுமாறு கெஞ்சுகின்றனர். மூன்று மாதம் இந்தப் பணியை செய்து கொடுக்குமாறு எனது நண்பர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

இவர்களிடம் இந்தப் பணியை முன்னெடுத்துச் செல்ல குழுவொன்று இல்லை. அதனால் ரணில் விக்ரமசிங்கவின் திட்டங்களின் பிரகாரம்தான் அவர்கள் நாட்டை வழிநடத்தி வருகின்றனர். அவ்வாறு செயல்பட்டால் நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியும். ஆனால், அவர்களுக்கு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்பு என்பது வேறு.” என்றார்.