அரசாங்கத்தின் அதிரடித் தீர்மானங்கள்: நடுங்கும் நிதிக் குற்றவாளிகள்!

0
17

மென்டிஸ் கம்பனியின் (W.M. Mendis and Company Ltd) தலைவர் அர்ஜுன அலோசியஸுக்கு வரி ஏய்ப்பு மோசடியில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இவ்வாறான நிதிக் குற்றவாளிகள் பெரும் அச்சத்தில் உள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நீதித்துறை தமது எல்லைக்குள் அரசியல் செல்வாக்கு இல்லாமல் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளது என்பது அவர்களின் பொதுவான கருத்தாக காணப்படுகிறது.

ஜனாதிபதி அநுர அரசாங்கத்தை ஏமாற்றிய செல்வந்தர்கள், வர்த்தகர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக செயற்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளார்.

நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பல நிதிக் குற்றங்கள் தொடர்பாக அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பிப்பது குறித்து ஆய்வாளர்கள் அவதானம் செலுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்று குறுகிய காலப்பகுதியிலேயே அரச பொறிமுறையில் பலம் வாய்ந்த நிறுவனங்கள் தமது துறைகளில் சுயாதீனமாக செயற்படுவது சாதகமான அணுகுமுறையை எடுத்துக்காட்டுவதாகவும் அந்த ஆய்வாளர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் நாட்களில் பலருக்கு எதிராக இவ்வாறான சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அரசாங்கத்திற்கு பல பில்லியன் ரூபா பெறுமதியான வரியை செலுத்த தவறிய மதுபான விற்பனை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.