குடியுரிமையை மீட்க முயற்சி: ஜனாதிபதியுடன் ரஞ்சன் சந்திப்பு

0
124

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குடியுரிமை விரைவில் மீளமைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

உரிய ஆவணங்களுடன் ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதி அலுவலகத்திற்கு நேற்று அழைக்கப்பட்டதையடுத்து, அவரது குடியுரிமைகள் விரைவில் மீளமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி செயலகத்திற்கு விஜயம் செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,

“சில ஆவணங்களை கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. நான் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களை அணுகினேன், அவர்கள் எனது குடியுரிமைகளை மீட்டெடுப்பதற்கான எனது கோரிக்கைக்கு செவிசாய்த்தனர்.

அத்துடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் தொலைபேசியிலும் பேசினேன்” என அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

தொடர்ந்தும் பேசிய அவர் “நான் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டு வாக்களிக்கும் உரிமையை இழந்தேன். ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க எனக்கு ஒரு வாக்குச் சீட்டு கிடைத்தது. இருப்பினும், நான் வெளிநாட்டில் இருந்ததால் என்னால் வாக்களிக்க முடியவில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவீர்களா என கேட்டதற்கு விரைவில் அது குறித்து அறிவிக்கப்படும் என்றார்.