இலங்கைக் கடற்பரப்பில் சீன ஆய்வு கப்பல்கள் கூட்டு ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சீனா அதிருப்தி அடைந்துள்ளதாக சீன உயர்மட்ட இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகரின் கண்காட்சி மையத்தில் ஊடகவியலாளர்கள் குழுவுடனான கலந்துரையாடலின் போதே அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
அதிருப்தியை ஏற்படக்கூடிய இலங்கையின் நடவடிக்கைகளால் நட்பு நாடாக இருப்பது தொடர்பில் சீனாவிலுள்ள சமூக ஊடகங்களில் பரவலான கவலைகள் எழுந்துள்ளதாக சீன தூதரகத்தின் பிரதித் தூதுவர் யான்வெய் ஜு தெரிவித்துள்ளார்.
இலங்கை மூன்றாம் தரப்பினரின் வேண்டுகோளின் பிரகாரம் நடவடிக்கை மேற்கொள்வதாக கூறிய அவர் சில நாடுகள் இதனை இராஜதந்திர வெற்றியாக கருதினாலும், இலங்கையின் இக்கட்டான சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்வதில் சீனா அக்கறை செலுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சுதந்திரம் மற்றும் இறையாண்மையை சீனா மதிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கையின் சுதந்திரமான முடிவாக இருந்தாலும் பிற நாடுகளின் செல்வாக்கு காரணமாக இவ்வாறான வதந்திகள் பரவுவதாக கூறிய அவர் இலங்கை அதிகாரிகளுக்கு இதுபோன்ற ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் திறன்இன்மையால், சீனா உதவ முன்வந்துள்ளது என்றார்.