பரப்புரை போர் உக்கிரம்: அநுர அலை குறித்து சர்வதேசத்தின் கழுகுப்பார்வை

0
92

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது பரப்புரை போரை முழுவீச்சுடன் முன்னெடுத்துவருகின்றனர். ஒரே நாளில் மூன்றுக்கு மேற்பட்ட பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்றுவருகின்றனர்.

மறுபுறத்தில் கட்சி தாவல்கள், குதிரைப் பேரம், கடைசி நேர கழுத்தறுப்பு என சாக்கடை அரசியலுக்கே உரித்தான சம்பவங்களும் இனிதே அரங்கேறிவருகின்றன.

தாம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றால் இடைக்கால அரசு எவ்வாறு அமையும் நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்படும் உள்ளிட்ட தகவல்களையும் ஜனாதிபதி வேட்பாளர்கள் வெளிப்படுத்திவருகின்றனர்.

ஜனாதிபதி தேர்தலில் சஜித் அல்லது அநுர ஆகியோர் வெற்றி பெற்றால் டிசம்பர் மாதமளவில் பொதுத்தேர்தல் நடத்தப்படக்கூடும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றாலும் அதே காலப்பகுதியில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மற்றப் பக்கம் பறக்குமா சேவல்?

இதற்கிடையில் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்துள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இறுதி நேரத்தில் சஜித் பிரேமதாச பக்கம் சாயவுள்ளது என வெளியாகும் தகவல்களை காங்கிரஸ் முற்றாக நிராகரித்துள்ளது.

ஜனாதிபதியுடன் கடந்த 30 ஆம் திகதி இதொகா புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடவிருந்தது. எனினும் அந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை.

இறுதி நேரத்தில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்காகவே இ.தொ.கா இவ்வாறு செயற்பட்டது என சுட்டிக்காட்டியே மேற்படி தகவல் வெளியாகி இருந்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் இதொகா தலைவர் செந்தில் தொண்டமான் உரையாற்றி இருந்தார்.

“காங்கிரஸ் முடிவொன்றை எடுத்துவிட்டால் அதில் இருந்து கடைசிவரை பின்வாங்காது.” – என அவர் திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.

“வெற்றி, தோல்வி என்பதைவிட எங்களுக்கு கொள்கைதான் முக்கியம். முடிவொன்றை எடுத்துவிட்டு பிரசாரத்தை குழப்பும் வகையில் செயற்படும் பழக்கம் தமது தரப்புக்கு கிடையாது.” என்று இது பற்றி தன்னிடம் விசாரித்த அரசியல் தலைமைகளுக்கு கடுந்தொனியில் செந்தில் தொண்டமான் பதிலளித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

பதவிகள் பறிப்பு

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கிய இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்கவின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ராஜபக்ச அரசியல் முகாமில் உள்ள மேலும் நான்கு இராஜாங்க அமைச்சர்களும் குறித்த பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அரசமைப்பில் தனக்குள்ள அதிகாரத்தின் பிரகாரமே குறித்த இராஜாங்க அமைச்சர்களை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான கீதா குமாரதுங்க, ஷசீந்திர ராஜபக்ச, டிசி சானக, தேனுக விதானகே மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோரே இவ்வாறு பதவிகளில் இருந்து தூக்கப்பட்டுள்ளனர்.

ராஜபக்ச அணியில் உள்ள நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை இராஜாங்க அமைச்சு பதவிகளில் இருந்து சில நாட்களுக்கு முன்னர் நீக்கியிருந்த நிலையிலேயே தற்போது மேலும் ஐவர் நீக்கப்பட்டுள்ளனர்.

நாமலும் ஒற்றையாட்சியும்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவும் அவரின் சகாக்களும் மாகாணசபைகளுக்கு பொலிஸ், காணி அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது என்ற கருத்தை அனைத்து பிரச்சார மேடைகளிலும் முழங்கி வருகின்றனர். அதுமட்டுமல்ல ஒற்றையாட்சியை பாதுகாக்கக்கூடிய ஒரே வேட்பாளர் நாமல் ராஜபக்ச மட்டுமே எனவும் சூளுரைத்து வருகின்றனர்.

அதாவது தன்னைதவிர வேறு எவரேனும் ஜனாதிபதியாக தெரிவாகிவிட்டால் நாட்டை பிளவுபடுத்தக்கூடிய முடிவுகளை எடுக்கக்கூடும் என்ற மாயையை தோற்றுவித்து சிங்கள, பௌத்த வாக்குகளை வேட்டையாடுவதற்கான பிரச்சார வியூகமாகவே இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் நாமலுக்கான வெற்றிவாய்ப்பு குறைவு என்றபோதிலும் அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கான ஒத்திவையாக இத்தேர்தலை பயன்படுத்திக்கொள்வதற்கு ராஜபக்ச தரப்பு திட்டமிட்டுள்ளது.

ஜனாதிபதிக்கான உத்தரவாதம்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலருடன் ஜனாதிபதி ஆலோசனை நடத்தியுள்ளார். தனக்கான வாக்கு வீதம் பற்றியும் அவர் விவரித்துள்ளார்.

இதன்போது ஜனாதிபதிக்கு 40 லட்சம் வரையான வாக்குகளைப் பெற்றுத் தருவதற்குரிய பொறுப்பை தமது அணி நிச்சயம் ஏற்கும் என பிரசன்ன ரணதுங்க உறுதியளித்துள்ளார் என தெரியவருகின்றது.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதற்கு 70 லட்சம்வரையான வாக்குகள் தேவை, எனவே, இன்னும் 30 லட்சம்வரையான வாக்குகளை இலக்கு வைத்தே செற்பட வேண்டியுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

30 சதவீதமான மக்கள் யாருக்கு வாக்களிப்பதென இன்னும் முடிவெடுக்காததால் யாருக்கு வெற்றி என்பதை இன்னும் இறுதிபடுத்த முடியாமல் உள்ளது என மற்றைய அமைச்சர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில் ஜனாதிபதியின் வெற்றிக்காக மொட்டு கட்சி எம்.பிக்கள் இறங்கி வேலை செய்தாலும் ஐக்கிய தேசியக் கட்சியினர் செயற்பாடு திருப்தியளிக்கும் வகையில் அமையவில்லை. இதனால் ஜனாதிபதியும் கடுப்பில் உள்ளார். தற்போது வேலை செய்யாவிடின் நாடாளுமன்ற தேர்தலின்போது ‘சீட்’ கேட்டு வந்துவிட வேண்டாம் என கடும் தொனியிலேயே ஜனாதிபதி அறிவித்துவிட்டாராம்.

சஜித்தின் வியூகம்

ஜனாதிபதி தேர்தலில் தான் வென்றுவிட்டதாக கருதும் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி ரணிலுடன் இணையும் எவ்வித திட்டமும் இல்லை என தனக்கு நெருக்கமானவர்களிடம் அறிவித்துவிட்டார்.

தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவு அலை பெருகிவருவதால் அவர்களின் வெற்றியை தடுப்பதற்காக சஜித், ரணில் ஒன்றிணைய வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்ணான்டோகூட இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

சஜித், ரணில் சங்கமத்தை சர்வதேசம்கூட விரும்புகின்றது என மேலும் சிலர் சுட்டிக்காட்டி இருந்தாலும் இதற்கு பச்சைக்கொடி காட்ட சஜித் மறுத்துவிட்டாராம்.

ஜனாதிபதி தேர்தலில் சஜித் வெற்றி பெற்றால் இடைக்கால அரசியல் யார் பிரதமர் என்ற கேள்வியும் கூட்டணிக்குள் எழுந்துள்ளது. மலையக மண்ணில் இருந்தே பிரதமர் ஒருவர் தெரிவாக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. மத்திய அல்லது ஊவா மாகாணத்தில் இருந்தே பிரதமர் ஒருவர் தெரிவாகும் சாத்தியம் உள்ளது.

இலங்கையின் தேர்தல் நிலைவரம் தொடர்பில் சர்வதேச சமூகமும் தமது கழுகு பார்வையை செலுத்தியுள்ளது. குறிப்பாக அநுரவுக்கான ஆதரவு அலை பற்றி அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.