தமிழ் தேசியவாதியாக தன்னைக் காட்ட முயற்சிக்கும் சாணக்கியன் எம்.பி: கஜேந்திரன் பகிரங்கம்

0
65

அரசாங்கத்தை விமர்சிப்பதன் ஊடாக சாணக்கியன் எம்.பி (Shanakiyan) தன்னை தமிழ் தேசியவாதியாக காட்ட முற்படுகின்றார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் (S. Kajendran) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அண்மையில் அம்பாறை (Ampara) மாவட்டம் கல்முனை பகுதியில் விசேட செய்தியாளர் சந்திப்பில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு தான் தீர்மானிக்கும் என்பதை சாணக்கியன் எம்.பி அடிக்கடி கூறி வருகின்றார்.

இவர்கள் இந்தியாவின் (India) முகவர்கள் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். இந்திய மேற்கு தரப்பு எந்த முகவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சொல்கின்றதோ அந்த முகவருக்கு வெளிப்படையான அறிவித்தலை செய்வார்கள்.

தமிழ் மக்கள் அந்த மனநிலையில் இல்லை என்று சொன்னால் ஏதோ ஒரு வகையில் பொது வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பில் இறுதி நேரத்தில் எடுத்து முடிவுகளை மாற்றக்கூடியவர்கள். தங்களுக்கென்று ஒரு நிலைப்பாடு கிடையாது.

சாணக்கியன் மும்மொழிகளிலும் சரளமாக பேசக்கூடியவர். இவ்வாறு பேசுகின்ற அவர் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவாக பேசுகின்றாரா அல்லது எதிராக பேசுகின்றாரா என்பது குறித்து மக்களால் பிரித்துணர முடியாதுள்ளது.

எப்பொழுதும் அரசாங்கத்திற்கு எதிராக பேசுவாரே தவிர ஒரு போதும் அரசுக்கெதிராக அவர் பேசுவது கிடையாது. அரசாங்கத்தை விமர்சிப்பதன் ஊடாக அவர் மக்களுக்கு தன்னை தமிழ்த் தேசியவாதியாக காட்ட முற்படுகின்றார். மக்களை ஏமாற்றுவதற்காகவே அரசாங்கத்தை விமர்சித்துக்கொண்டிருக்கின்றார்.

மக்கள் இவ்வாறானவர்களது பசப்பு வார்த்தைகளைக் கண்டு ஏமாறக் கூடாது. தேர்தலை பகிஷ்கரிப்பதற்கு தயாராக வேண்டும் என்பதை கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

சாணக்கியன் சுமந்திரனது (M. A. Sumanthiran) செல்லப்பிள்ளை. சம்பந்தன் ஐயாவின் (R. Sampanthan) செயல்வடிவம் சுமந்திரன். கூட்டமைப்பினுள் பிளவு என்பது அவர்கள் பதவிக்காக சண்டை பிடிப்பதாக இருக்கலாம்.

எனினும் எமது தேர்தல் பகிஷ்கரிப்பு விடயத்தை இவ்வாறானவர்கள் பிரிந்து நின்றாலும் பகிஷ்கரிக்க விடமாட்டார்கள். நிச்சயமாக யாரோ ஒருவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறுவார்கள்.

தமிழ் மக்கள் தேர்தலை பகிஷ்கரிக்க கூடாது என்ற நிலைப்பாட்டை எடுக்க முடியாதவாறு வாக்களிப்பு முறைகளை எவ்வழியிலும் நடாத்தி செல்வார்கள். எனவே மக்கள் இவ்வாறானவர்களை நிராகரிக்க முன்வர வேண்டும்“ என தெரிவித்தார்.