சமுர்த்தி பெறுபவர்கள் முயற்சியாளர்களாக மாற்றுவேன்: நாமல் உறுதி

0
94

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச, சமுர்த்தி வேலைத்திட்டத்தை பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

நாவலப்பிட்டியில் இடம்பெற்ற பேரணியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் சமுர்த்தி வேலைத்திட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் வறுமையை ஒழிப்பதில் முக்கியமானதாக இருக்கும் திட்டத்தை பற்றி சில தலைவர்களின் எதிர்மறையான கருத்தையும் நாமல் ராஜபக்ச விமர்சித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த நாமல்,

“சமுர்த்தி இயக்கம் தோல்வியடைந்து விட்டதாக சில தலைவர்கள் கருதுகின்றனர். அந்த இயக்கம்தான் மக்களை வறுமையில் இருந்து காப்பாற்றியது.

பயனாளர்களின் குழந்தைகளுக்கு தொழில்நுட்பம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தகுந்த வேலைவாய்ப்பைக் கண்டறிந்து அவர்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நான் ஜனாதிபதியானால், சமூர்த்தி திட்டத்தை வலுப்படுத்துவதைத் தாண்டி, சமுர்த்தி பெறுபவர்களை தொழில்முயற்சியாளர்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட கொள்கைகளை நடைமுறைப்படுத்துவேன்” என உறுதியளித்தார்.