ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களுக்கு கட்டுப்பணம் செலுத்த தேர்தல்கள் ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட கால எல்லை இன்று புதன்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இம்முறை 40 வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
நாளை வியாழக்கிழமை காலை 9 மணிமுதல் 11 மணிவரை வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியும். 11 மணிமுதல் 11.30 மணிவரை தமது ஆட்சேபனைகளை தெரிவிக்க முடியும்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, நாளைய தினம் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட உள்ளது. அதன் பின்னரான பணிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுன்ன.
செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் வாகன அனுமதிப்பத்திரம் அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட முதியோர் அடையாள அட்டை, ஓய்வூதியத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஓய்வூதியம் பெறுபவரின் அடையாள அட்டை, இது எதுவுமே இல்லாதவர்கள் தங்கள் கிராம அலுவலருடன் தேர்தல் அலுவலகத்திற்குச் சென்று தற்காலிக அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்டு தேர்தலில் வாக்களிக்க முடியும். மாற்றுத்திறனாளிகள் தமக்கு வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டையை பயன்படுத்த முடியும்” என்றார்.
இதேவேளை, நாளைய தினம் வேட்புமனுத் தாக்கல் இடம்பெற இருப்பதால் இராஜகிரிய பகுதியில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று கொழும்பில் வேட்பாளர்கள் வருகைதரும் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸார் வழங்கியுள்ள போக்குவரத்து வழிமுறைகளை பின்பற்றுமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு கூறியுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.