ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நாளை மறுதினம் வியாழக்கிழமை வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன் காரணமாக கொழும்பு இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் திணைக்களம் மற்றும் அதனை அண்டியப் பகுதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது கட்டுப்பணத்தை நாளை புதன்கிழமை நண்பகல் 12 மணிவரை செலுத்த முடியும். அதன் பின்னர் செலுத்தப்படும் எந்தவொரு வேட்பாளரினதும் கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ளப்படாது.
அதேபோன்று நாளை மறுதினம் காலை 9 மணிமுதல் 11 மணிவரை தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியும் எனவும் ஆணைக்குழு கூறியுள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்ய அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களும் முக்கிய பிரமுகர்களும் தேர்தல் திணைக்களத்தை சுற்றி சூழ்வார்கள் என்பதால் தேர்தல் திணைக்களம் மற்றும் அதனை அண்டிய பகுதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துளள்து.
அத்துடன், இராஜகிரிய பகுதியில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பொலிஸாரின் போக்குவரத்து வழிகாட்டல்களை பின்பற்றி சாரதிகள் தமது பயணங்களை மேற்கொள்ளுமாறும் பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவுறுத்தியுள்ளது.