நல்லூர் கந்தனுக்கு இன்று கொடியேற்றம்: கோலாகலமாக திருவிழா ஆரம்பம்

0
119

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமாகவுள்ளது. இன்று காலை பத்து மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளது.

இதன்படி சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றிருந்தது. யாழ் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் நடைபெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து அங்கிருந்து கொடிச்சீலை சிறிய தேரில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினை வந்தடைந்தது.

செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாய பூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும். இதன்படி இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றம் இடம்பெறவுள்ளதுடன் தொடர்ந்து 25 நாட்களுக்கு பெருவிழா நடைபெறவுள்ளது.

ஓகஸ்ட் 18ஆம் திகதி மஞ்சமும், 31ஆம் திகதி சப்பரமும், செப்டம்பர் முதலாம் திகதி தேர்த் திருவிழாவும் இடம்பெறும். தொடர்ந்து செப்டம்பர் இரண்டாம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் மாலை கொடியிறக்கமும் நடைபெறும். செப்டம்பர் மூன்றாம் திகதி பூங்காவனமும் செப்டம்பர் நான்காம் திகதி வைரவர் உற்சவத்துடனும் மஹோற்சவம் நிறைவுக்கு வரும்.