ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் இறுதிக்கட்டப் பணிகளை அடுத்த வரவு செலவுத்திட்டத்தின் மூலம் நிதியைப் பெற்று முழுமையாக பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப் படுவதாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும், அவர்களுக்கு அரச மற்றும் தனியார் துறைகளில் தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்,
“மிக மோசமான நிலைக்குச் சென்ற எமது நாடு தற்போது மெல்ல மெல்ல வளர்ந்து வருகின்றது. இந்த வளர்ச்சி தொடர்ந்தும் முன்னோக்கிச் செல்ல வேண்டும். எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது கட்டுமானத்துறை மற்றும் வீதிகளின் புனரமைப்புப் பணிகள் உட்பட பல்வேறு அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்டன. சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டுக்குப் பின்னர், தற்போது மீண்டும் அவை ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன.