தினேஷ் குணவர்தனவுக்கு புதிய தலைமை: ரணிலின் புதிய வியூகம்

0
110

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னிலையாவதற்காக எதிர்வரும் நாட்களில் அமைக்கவுள்ள கூட்டணியில் தலைமைத்துவத்தை பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று (06) கொழும்பிலிருந்து வெளியான சிங்கள நாளிதழான “தினமின“ பத்திரிகையில் பிரதான செய்தியில் இது தொடர்பில் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள் இணைந்து இந்த புதிய அரசியல் கூட்டணியை கட்டியெழுப்பவுள்ளதாக செய்தி தெரிவிக்கின்றது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு முழு நாட்டிலிருந்தும் சுமார் 250,000 வாக்குகள் கிடைக்கப்பெற்ற நிலையில் தற்போது அதனை அதிகரிப்பதற்காக ரணில் விக்கிரமசிங்க பல்வேறு அரசியல் உத்திகளைக் கையாண்டு வருகிறார்.

மேலும், புதிதாக அமைக்கவுள்ள கூட்டணி அதன் புதிய உத்தியாக பார்க்கப்படும் நிலையில் பிரதமர் தினேஷ் குணவர்தன அதன் தலைமைத்துவத்துக்கு தயாராக இருப்பதும் அந்த உத்திகளுள் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.