அரச தாதியர்கள் சீருடையில் கலந்து கொண்ட மாநாடு: தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக அமையாது

0
137

ஜே.வி.பியின் அரசியல் கூட்டணி என அழைக்கப்படும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் நடைபெற்ற அகில இலங்கை தாதியர் மாநாட்டில், அரச தாதியர்கள் சீருடையில் கலந்து கொண்டமை தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக அமையாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொது ஊழியர்களை நிர்வகிக்கும் தாபன விதிக் கோவையின் கீழ் அத்தகைய பங்கேற்பு அனுமதிக்கப்படுகிறது எனவும் வலியுறுத்தியுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) மஹரகம பிரதேசத்தில் நடைபெற்ற அகில இலங்கை தாதியர் மாநாடு குறித்து தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பப்ரல் (PAFFREL) அமைப்பு கவலை வெளியிட்டிருந்தது.

தேர்தல் ஆணைக்குழுவுக்கு பப்ரல் அமைப்பு கடிதம் ஒன்றின் மூலம் இதனை அறிவித்துள்ளது. குறித்த கடிதத்தில், தேர்தல் பிரச்சாரத்தில் அரச தாதியர்கள் தமது சீருடையில் கலந்துகொண்டமை தவறான ஒரு விடயமாகும்.

அரச நிதியின் ஊடாக வழங்கப்படும் சீருடைகளை தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்துவது தேர்தல் சட்டங்களின் கீழ் நெறிமுறையற்றது மற்றும் சட்டவிரோதமானது எனவும் பப்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியிருந்தது.

இவ்வாறான பின்னணியிலேயே, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அரச தாதியர்கள் சீருடையில் கலந்து கொண்டமை தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக அமையாது என தெரிவித்துள்ளது.