உயிர் போனாலும் எமது போராட்டம் தொடரும்: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்

0
95

வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளை தேடி போராடிவரும் தாய்மார்களை பயங்கரவாத முத்திரை குத்தி அவர்களின் போராட்டத்தினை மலினப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவர் திருமதி அ.அமலநாயகி தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்லடியில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு நேற்று திங்கட்கிழமை அமலநாயகி விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

விசாரணைகளின் பின்னர் மட்டு. ஊடக அமையத்தில் கருத்து தெரிவித்த அவர்,

ஊடக சந்திப்புக்களை செய்தமை, பயங்கரவாத தடுப்பு சட்டத்திற்கு எதிரான போராட்டம், மயிலத்தமடு மாதவணை பண்ணையாளர் போராட்டத்தில் கலந்து கொண்டமை, பல்கலைக்கழகத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் நிகழ்வில் கலந்து கொண்டமை, ஜக்கிய நாடுகள் சபையில், இலங்கை அரசாங்கதிற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தமை, சர்வதேச பெண்கள் அமைப்புக்களுடன் தொடர்புகளை பேணுகின்றமை, புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்புகளை பேணுகின்றமை, புலிகளை மீள் உருவாக்குதல் போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றன.

விசாரணையின் போது, ‘குற்றம் சுமத்தப்பட்டவர்களை விசாரிக்காது, பாதிக்கப்பட்டவர்களை அச்சுறுத்தும் விதமாக, பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகளாக்கும் முனைப்புடன் அரச புலனாய்வு கட்டமைப்புக்கள் செயற்பட்டுவருகின்றன.

எமது போராட்டத்தினை எங்களை அச்சுறுத்துவதன் ஊடாக முடிவுக்கு கொண்டு வரலாம் என்று நினைக்கின்றார்கள். எங்களுக்கு நீதி கிடைக்கும் வரையில் எமது உயிர் போனாலும் எமது போராட்டம் தொடரும்” என்றார்.