தொழிற்சாலைக்குள் அத்துமீறல் சம்பவம்: அமைச்சர் ஜீவன் தொண்டமானை கைது செய்ய உத்தரவு

0
191

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நுவரெலியா பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

களனிவெளி பெருந்தோட்டத்திற்குட்பட்ட பீட்ரு தேயிலைத் தொழிற்சாலைக்குள் கடந்த மே மாதம் 30ஆம் திகதி அத்துமீறி நுழைந்ததாகக் கூறி அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்டவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்படி, குறித்த முறைப்பாடு தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி ஜயமினி அம்பகஹவத்த முன்னிலையில் இடம்பெற்றிருந்தது.

குறித்த வழக்கு தொடர்பில் மன்றில் முன்னிலையாகுமாறு அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்டவர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருந்தது.

எனினும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை. இதனையடுத்து மேலதிக தகவல்கள் நுவரெலியா பொலிஸாரால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனை பரிசீலனை செய்த நீதிபதி வழக்கின் பிரதான சந்தேக நபரான அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் ஏனையவர்களைக் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, சந்தேகநபர்களை கைது செய்து ஒகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி மன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.