அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தை உகண்டாவை சேர்ந்த சிறுவர்கள் நடித்துக்காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
டிரம்ப் மீது தாக்குதல் நடத்தப்பட்ட மறுநாள் டிக்டொக்கெர் பிளட்அக் தலைமையிலான சிறுவர் குழுவினர் அந்த சம்பவத்தை வீடியோவில் நடித்துக் காட்டியுள்ளனர்.
அவர்கள் மரத்தினால் துப்பாக்கிகளை செய்து, வீடியோவில் நடித்துள்ளனர். டிரம்ப் துப்பாக்கி சூட்டின் பின்னர் நிலத்தில் அமர்ந்து பின்னர் எழும்பி கைமுஷ்டிகளை உயர்த்தி கோசமிடுவதை டிரம்ப்போன்று நடித்த சிறுவன் செய்து காட்டியுள்ளான். மில்லியன் கணக்கானவர்கள் இதனை பார்த்துள்ளனர்.
டிரம்பை படுகொலை செய்யும் முயற்சி உலகம் முழுவதும் அதிர்ச்சியுடன் பார்த்தது என்பதை சிறுவர்களின் இந்த வீடியோ வெளிப்படுத்தியுள்ளதாக சமூகவலைத்தவாசிகள் பலர் தெரிவித்துள்ளனர்.

வீடியோவிற்காக சிறுவர்கள் டிரம்பின் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நிமிடத்தின் உண்மையான ஒலிகள் அலறல்கள் சத்தங்களை பயன்படுத்தியுள்ளனர்.
ஒரு சிறுவன் டிரம்ப்போல தற்காலிகமாக அமைக்கப்பட்ட சாய்வு மேசையின் பின்னால் நின்று உரையாற்றியதுடன் டிரம்ப் போன்று கைகளை உயர்த்தி போராடுவோம் என அவன் சத்தமிட்டுள்ளான்.
குண்டடி பட்ட டிரம்பை பாதுகாவலர்கள் அழைத்து செல்ல முயன்றவேளை அவர் மீண்டும் தனது கைமுஷ்டியை உயர்த்திக் காண்பித்ததையும் அந்த உகன்டா சிறுவன் நடித்துக்காட்டியுள்ளான்.
கொலை முயற்சி சர்வதேச அளவில் பதற்றத்தையும் அமெரிக்காவில் அரசியல்வாதிகளின் பாதுகாப்பு குறித்த கவலையையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், உகண்டா சிறுவர்களின் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.