போராட்டத்தின் இலக்குகளை அடைய இதுவே வாய்ப்பு: மக்களின் விருப்பத்திற்கு முதலிடம்

0
87

அரகலய போராட்டத்தின் இலக்குகளை அடைவதற்கான முதல் வாய்ப்பு ஜனாதிபதித் தேர்தலே என ஜேவிபி தெரிவித்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று (17) கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜேவிபியின் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொல்லாத ஆட்சியாளர்களை விரட்டியடித்து தமக்கான சிறந்த அரசாங்கத்தை உருவாக்குவது அவசியமானது எனவும் அரகலய போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் தமது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற ஆவல் கொண்டுள்ளதாகவும் அக்கட்சியின் செயலாளர் டில்வின் சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

ராஜபக்ச ஆட்சியை ஒழித்து புதிய மாற்றம் ஏற்படும் என அரகலய போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இலங்கை மக்கள் எதிர்பார்த்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் இலக்குகள் நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

”அந்த மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றுவதற்கான முதல் சந்தர்ப்பம் இந்த ஜனாதிபதித் தேர்தல். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தங்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறார்கள்.

தீய ஆட்சியாளர்களை மாற்றி, தங்களுக்கான சிறந்த ஆட்சியை உருவாக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் பதவி விலகிச் சென்ற ஜனாதிபதிக்கு பின்னர் நடைபெறும் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் இதுவாகும்.” எனத் தெரிவித்தார்.