“இந்தியன் 2 படத்தை வெளியிடக் கூடாது” – வழக்குத் தொடுத்த நபர்: ஷங்கர் தரப்பில் இருந்து பதில்

0
140

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் இந்தியன் 2. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இரண்டும் சேர்ந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படம் நாளை மறுநாள் (ஜூலை 12) வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த ஒருவர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ‘சுமார் 55 ஆண்டுகளாக மஞ்சா வர்மக்கலை தற்காப்பு பயிற்சி பள்ளி ஆராய்ச்சி கூடம் என்ற பெயரில் வர்மக்கலை தற்காப்பு பயிற்சிகளை அளிக்கிறோம். இந்நிலையில் இந்தியன் திரைப்படத்துக்காக படப்பிடிப்பு தளத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு வர்மக்கலைகளை கற்றுக் கொடுத்தேன்.

அதனால் அப்படத்தின் title cardஇல் எனது பெயர் சேர்க்கப்பட்டது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் 2ஆம் பாகத்திலும் என்னிடம் கற்ற முத்திரையை பயன்படுத்தியுள்ளனர். ஆனால் இதற்காக என்னிடம் எந்த அனுமதியும் பெறவில்லை. அதுமட்டுமின்றி எனது பெயரை title cardஇல் சேர்க்க வேண்டும் என ஏற்கனவே கடிதம் அனுப்பியும் எந்த பதிலும் இல்லை. எனவே எனது கோரிக்கை நிறைவேறும் வரையில் இத்திரைப்படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி செல்வ மகேஸ்வரியிடம் விசாரணைக்கு வந்தது. அப்போது ஷங்கர் தரப்பு வக்கீல் இதற்கு பதிலளிக்க 2 வாரம் கால அவகாசம் கோரினார். இந்நிலையில் 12 ஆம் திகதி படம் வெளியாகவுள்ள நிலையில் விரைவாக மனு தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதன்படி விசாரணை நாளை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.