மாந்தை அடம்பன் பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவர் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த வேளை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (05) வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பல்துறை ஆளுமை மிக்க ‘கம்பிகளின் மொழி பிறேம்’ என அழைக்கப்படும் கோபாலகிருஷ்ணன் கோகுல் பிறேம் குமார் (வயது-42) என்ற குடும்பஸ்தரே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு அடம்பன் வீதியில் உள்ள தனது வீட்டிற்கு முன் நின்று தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார். இதன்போது தன்னை வாகனத்தால் மோதி விட்டுச் சென்று விட்டனர் என சத்தம் போட்டுள்ளார்.
இதன்போது குடும்பத்தினரின் உதவியுடன் உடனடியாக அடம்பன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது. சடலம் தற்போது மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சடலம் பரிசோதனையின் பின்னர் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் முன்னாள் போராளி கால் மற்றும் ஒரு கையையும் இழந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



