கொழும்பில் இருந்து மாத்தறைக்கு மக்களை அழைத்து சென்ற ரணில்: முதல் கூட்டத்துக்கே ஆதரவாளர்கள் இல்லையா?

0
162

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை விசேட பிரசாரக் கூட்டமொன்று மாத்தறையில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஆளுங்கட்சியின் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர், பிரதி அமைச்சர்கள் மற்றும் பெருந்திரளான ஆதரவாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

”இக்கூட்டத்தில் நடு கடலில் சூறாவளியில் சிக்கி பழுதடைந்து தத்தளித்துக் கொண்டிருந்த கப்பலை நான்தான் கரைக்கு கொண்டுவந்தேன். ஏனைய அனைத்து மாலுமிகளும் கப்பலில் இருந்து தப்பிச் சென்றுவிட்டனர். தப்பிச் சென்ற மாலுமிகளிடம் மீண்டும் கப்பலை ஒப்படைக்க போகின்றீர்களா?,” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேள்வியெழுப்பியிருந்தார்.

இந்தக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டதாக ஆளும் தரப்பு தெரிவித்திருந்தது.

ஆனால், இந்தக் கூட்டத்துக்காக கொழும்பு அடிக்குமாடி குடியிருப்புகளில் உள்ளவர்களை பஸ்களில் அழைத்துச் சென்றுள்ளனர் என்றும் கொழும்பில் இருந்து மக்களை அழைத்துச் சென்றே கூட்டம் நடைபெறும் இடத்தை நிரப்பியுள்ளனர் என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

என்றாலும், ரணில் விக்ரமசிங்கவின் முதல் தேர்தல் கூட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும் மக்களின் அமோக ஆதரவு அவருக்கு இருப்பதாகவும் ஆளுங்கட்சி விளம்பரப்படுத்தி வருகிறது.