நண்பனாக பழகி ஆண் ஒருவரை பெண்ணாக மாற்றிய சம்பவம்: குழம்பி தவிக்கும் பொலிஸார்

0
136

நண்பனாகப் பழகி அவருக்கே தெரியாமல் அறுவை சிகிச்சை செய்து ஆண் ஒருவரை பெண்ணாக மாற்றிய சம்பவம் இந்தியாவின் உத்திரப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் முசாபர் நகரைச் சேர்ந்தவர் 20 வயதுடைய இளைஞருக்கே அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இவர் தற்போது தனக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் முதற்கட்டமாக கடந்த 16ஆம் திகதி சந்தேகநபரை கைது செய்திருந்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணைகளைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இளைஞரை அழைத்து பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். இதனடிப்படையில் அவர் வழங்கிய வாக்குமூலம் பொலிஸாரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த சந்தேகநபருடன் தான் சில காலமாக பழகிவருவதாகவும், தனக்கு தெரியாமலேயே அவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், சிகிச்சை செய்ததே தனக்கு தெரியாது எனவும் கண்விழித்து பார்த்த போது, ”இப்போது நீ ஒரு பெண். உன்னை லக்னோவுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்ளப்போகிறேன். இதற்கு நீ எதிர்ப்பு தெரிவித்தால் உன் தந்தையைக் கொன்றுவிடுவேன் என மிரட்டினார். வைத்தியசாலையில் என் அனுமதி இல்லாமலே எனக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது ” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம், குற்றச்சாட்டை மறுத்திருக்கிறது. இந்த விவகாரம் குறித்து தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் கீர்த்தி கோஸ்வாமி கருத்து தெரிவிக்கையில்;

”அறுவை சிகிச்சை செய்துகொண்ட அந்த இளைஞர், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரான வைத்தியரை சந்திக்க இரண்டு மாதங்களாக வைத்தியசாலைக்கு தவறாமல் வந்து கொண்டிருந்தார். அந்த ஆண் தன்னை ஒரு பெண்ணாக உணர்வதாகவும், பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

சட்டத்தின்படி பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு முன் தேவையான ஒரு முன்நிபந்தனையான அவரது மனநிலையை மதிப்பிடுவதற்கு வைத்தியர் அந்த நபரை இரண்டு மனநல மருத்துவர்களிடம் பரிந்துரைத்தார்.

இரண்டு மனநல மருத்துவர்களும் அவருடைய மனநலம் குறித்த தெளிவாக கூறிய பிறகு அறுவை சிகிச்சைக்கான நடைமுறைகள் தொடங்கின.

இதனால் அறுவை சிகிச்சை செய்துக்கொள்வதில் ஆர்வமாகவே இருந்துள்ளார். இதனால் அறுவை சிகிச்சையும் முடிந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக அறுவை சிகிச்சைசெய்துக்கொண்ட இளைஞரின் பெற்றோரும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனாலும், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் பெரும் குளப்பத்தில் இருப்பதாகவும் உரிய விசாரணைகளின் பின்னரே உண்மை எதுவென தெரியவரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.