உலக வங்கியின் ஊடாக கிடைக்கப்பெற்றிருக்கின்ற விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊழல் மற்றும் பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தக் கூடிய தகவல்கள் கிடைக்கப்பெற்றிருப்பதாக இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி பங்களிப்பில் மன்முனை பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளவர்களுக்கான வாழ்வாதார பொருட்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மண்முணை பற்று பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை (17) இடம்பெற்றது.
மண்முணைப் பற்று பிரதேச செயலக பிரிவிற்கான 11 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 7.5 மில்லியன் ரூபாவிற்கு மலசல கூடங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதுடன் 3.5 மில்லியன் ரூபாவில் மீனவர்களுக்கான வாழ்வாதார உதவிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் சமூக அமைப்புக்களுக்கான உபகரணங்கள், பாடசாலைகளுக்கான விளையாட்டு மற்றும் பேண்ட் வாத்திய கருவிகள் அத்தோடு உள்ளூர் விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,
2022 ஆம் ஆண்டு மிகவும் ஒரு மோசமான வருடமாக காணப்பட்டது. 2023 ஆம் ஆண்டு ஓரளவு மாற்றம் ஏற்பட்டது. 2024 ஆம் ஆண்டு ஓரளவு முன்னேரிய நாட்டில் வாழக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
மலசல கூடங்களுக்கு நிதியை ஒதுக்குவது சிறந்ததே.மிக மோசமான சுகாதார நடைமுறைகளில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதற்கு பலவிதமான திட்டங்களை அமுலாக்க வேண்டிய தேவைப்பாடுகளும் எழுந்திருக்கின்றது ஆனால் சில முயற்சிகளில் தோல்வியுற்றுள்ளோம்.
எமக்கு சிக்கலாக இருப்பது உலக வங்கியின் ஊடாக கிடைக்கப்பெற்றிருக்கின்ற விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தில் மாத்திரம் தான் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊழலும் பிரச்சினைகளும் ஏற்பட்டிருக்கதாக மக்கள் மத்தியில் உறுதிப்படுத்தக் கூடிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
எவ்வாறாயினும் நாட்டில் வாய்ப்புகளை வழங்குகின்ற அச்சத்தை போக்குகிற ஆண்டாக 2025 ஆம் ஆண்டு அமைய வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.