முறையாக பராமரிக்கப்படாத தேயிலைத் தோட்ட பெருந்தோட்டக் கம்பனிகளின் ஒப்பந்த காலத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இலங்கை தேயிலை சபைக்கு இது குறித்து ஆலோசனை வழங்கியுள்ளார்.
அரசாங்கத்துக்குச் சொந்தமான தேயிலை தோட்டங்களின் நிர்வாகம், தனியார் தோட்ட நிறுவனங்களிடம் குத்தகை அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனாலும்,பொறுப்பேற்றுக் கொண்ட தேயிலைத் தோட்டங்களை பல பெருந்தோட்டக் கம்பனிகள் உரிய முறையில் பராமரிப்பதில்லை. இது குறித்து விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சுக்கு தகவல் கிடைத்துள்ளது. தேயிலைக்கு உரமிடுவதும் தேயிலை தோட்டங்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக மானிய அடிப்படையில் தேயிலை உரங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்த உர மானியத்திற்காக இலங்கை தேயிலை சபை 12,000 மில்லியன் ரூபாவை செலவிடுகிறது. தேயிலை உரம் போதுமான அளவு அரசாங்கத்திற்கு சொந்தமான உர நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று தொழில் அமைச்சில் இடம்பெற்றது. பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளன பிரதிநிதிகள் இக்கூட்டத்துக்கு வருகை தரவில்லை. இக்கலந்துரையாடலில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் வடிவேல் சுரேஷ், தொழில் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் பலரும் பங்கேற்றிருந்தனர்.