மாத்தறை புதிய மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த சிசுவின் அடையாளத்தை உறுதிப்படுத்த DNA பரிசோதனையை மேற்கொள்ளுமாறு மாத்தறை பிரதான நீதவான் அருண புத்ததாச உத்தரவிட்டுள்ளார்.
தமது சிசு தொடர்பில் DNA பரிசோதனை செய்யுமாறு பெற்றோர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய , வைத்தியசாலையின் பணிப்பாளர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் மாத்தறை பிரதான நீதவான் அருண புத்ததாச இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மாத்தறை பிரதான நீதவான் அருண புத்ததாச குறித்த வைத்தியசாலைக்கு சென்று , வைத்தியசாலை அதிகாரிகள் பெற்றோரிடம் காட்டியதாகக் கூறப்படும் சிசுவின் சடலத்தை பார்த்த பின்னர் நீதவான் இந்த உத்தரவை வழங்கினார்.
மாத்தறை வெலிகம பகுதியைச் சேர்ந்த 24 வயதான காவிந்த்யா மதுஷானி தனது முதல் குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக மாத்தறை புதிய மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 22ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார்.
மதுஷானி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட தினமே குழந்தையை பிரசவித்திருந்த நிலையில், குழந்தை இறந்துவிட்டதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் குழந்தையின் சடலத்தை பெற்றோரிடம் காட்டாமல் இருந்ததும்,இது குறித்து அதிகாரிகள் முன்னுக்குப் பின் முரணான கருத்துகளை தெரிவித்து வந்ததும் குழந்தையின் பெற்றோருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்று (27) பிற்பகல் பிரேத அறையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சிசு ஒன்றின் சடலத்தை வைத்தியசாலை ஊழியர்கள் பெற்றோரிடம் காண்பித்த போதிலும் அது தமது பிள்ளை இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.