பெருந்தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றியுள்ள அரசாங்கம்: ரணிலை புறக்கணிப்போம் என எச்சரிக்கை

0
139

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை கடந்த மே முதலாம் திகதி முதல் 1700 ரூபாவாக அதிகரித்து விசேட வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டது.

அரசாங்கத்தின் மத்தியஸ்தத்தின் ஊடாக கம்பனிகளுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையில் கடந்த ஆறுமாதகாலமாக சம்பள அதிகரிப்பு தொடர்பிலான பேச்சுகள் இடம்பெற்று வந்தன.

என்றாலும், இந்தப் பேச்சுகளில் முத்தரப்புக்கும் இடையில் எவ்வித உடன்பாடுகளும் எட்டப்படவில்லை. இறுதியாக இடம்பெற்ற பேச்சில் 1300 ரூபாவை நாட் சம்பளமாக வழங்க முடியும் என கம்பனிகள் தெரிவித்திருந்தன.

தீர்மானத்தை நாங்கள் எடுக்கவில்லை

ஆனால், இதற்கு தொழிற்சங்கங்கள் இணக்கம் வெளியிடவில்லை. வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப குறைந்தபட்சம் 1700 ரூபா சம்பளத்தை வழங்க வேண்டுமென தொழிற்சங்கங்கள் அழுத்தம் கொடுத்தன.

இந்த நிலையிலேயே கடந்த முதலாம் திகதி 1700 சம்பள அதிகரிப்பு தொடர்பிலான சம்பள நிர்ணய சபையின் தீர்மானம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

இந்த வர்த்தமானியின் பிரகாரம் தொழிலாளர்களுக்கு 1350 ரூபா அடிப்படைச் சம்பளமும் 350 ரூபா கொடுப்பனவாகவும் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், வர்த்தமானி வெளியான மறுநாளே இதற்கு முதலாளிமார் சம்மேளனம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன், 1700 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கும் எந்தவொரு தீர்மானத்தையும் நாங்கள் எடுக்கவில்லை எனவும் அறிவித்திருந்தது.

கம்பனிகள் நீதிமன்றம் சென்றன

”தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில் அரசாங்கமும் தோட்டக் கம்பனிகளும் நாடகத்தை அரங்கேற்றியுள்ளதாக எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது.” என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

”சம்பள அதிகரிப்பை கம்பனிகள் புறக்கணித்துள்ளன. இந்த விவகாரம் குறித்து வழக்கு தொடர்ந்தால் அது சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு நீதிமன்றில் விவாதிக்கப்படும். அரசாங்கமும் கம்பனிகளும் இணைந்து தொழிலாளர்களை ஏமாற்ற இவ்வாறு செய்துள்ளனர்.

சம்பளத்தை அதிகரிக்குமாறு தொழிற்சங்கங்கள் எமக்கு அழுத்தம் கொடுக்கின்றன. அதனால் நாங்கள் சம்பளத்தை அதிகரிக்கிறோம். நீங்கள் வழக்கு தொடருங்கள் என அரசாங்கம் கம்பனிகளிடம் கூறியிருக்கும்.” என்றார்.

கடந்த 2020ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தின் காலத்தில் 1000 ரூபா சம்பள அதிகரிப்புக்கு எதிராக கம்பனிகள் நீதிமன்றம் சென்றன.

குறித்த வழக்கு விசாரணைகள் இரண்டுவருடங்கள்வரை நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டதுடன், அதன் பின்னரே தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டது. கம்பனிகள் நீதிமன்றம் சென்றால் அதுபோன்றதொரு நிலைமையே மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளது.

அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு கம்பனிகளுடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்பாடுடன் தேர்தலை இலக்காக கொண்டதாக இருக்கலாம் என தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இது அரசாங்கத்தின் இணக்கப்பாடாக இருக்கும் பட்சத்தில் ஜனாதிபதித் தேர்தலில் மலையகத்தில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புறக்கணிக்கப்படுவது உறுதியெனவும் தொழிலாளர்கள் எச்சரித்துள்ளனர்.